ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே 'காஸ்' சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 காயமடைந்து சிகிச்சை பெற்றதில் மூவர் இறந்தனர். தொழிற்சாலைகள் நிறைந்த ஒரகடம் பகுதியில் தீயணைப்பு நிலையம் இல்லாததால், தொலை துாரத்தில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்களால் தாமதம் ஏற்பட்டு பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால், தீவிபத்து மற்றும் வேறு சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், 15 கி.மீ. ,துாரம் உள்ள ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள், ஒரகடம் வந்து தீயை அணைக்க வேண்டியுள்ளது. போக்குவரத்து நெரிசலில் ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து ஒரகடம் பகுதிக்கு தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் தீயை கட்டுபடுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
அதன்பின் வாகனங்கள் வந்து தீயை அணைத்தாலும் அதிக அளவில் சேதாரங்கள் ஏற்படுகின்றன.ஒரகடத்தில் தீயணைப்பு நிலையம் அமைந்தால், சுற்று வட்டத்தில் தீ விபத்து நிகழ்ந்ததால், விரைந்து சென்று தீயை அணைக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.
ஒரகடம் அருகே தேவரியம்பாக்கத்தில் ஊராட்சி தலைவரின் தம்பியின் 'காஸ்' சிலிண்டர் குடோனில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் காயமடைந்ததில், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற மூவர் இறந்தனர்.விபத்து நடந்தது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
ஒரகடத்தில் தீயணப்பு நிலையம் இல்லாததால் தொலை துார தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருவதற்கு இரண்டு மணி நேரம் தாமதமானது. அதற்குள் தீ விபத்து மிக மோசனான நிலைக்கு சென்று மூவர் இறக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் 9 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.