கோவை:கோவையில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு மற்றும் பஸ் கண்ணாடி உடைப்பு வழக்குகளில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் செப்., 22ம் தேதி இரவு மூன்று வெவ்வேறு இடங்களில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டன. மாவட்ட பா.ஜ., அலுவலகம் 100 அடி ரோட்டில் பா.ஜ., பிரமுகர் மோகன் என்பவரின் கடை ஒப்பணக்கார வீதியில் மாருதி செலக்சன்ஸ் ஜவுளிக்கடை ஆகிய இடங்களில் குண்டுகளை மர்ம நபர்கள் வீசினர்.ஒப்பணக்கார வீதி ஜவுளிக்கடையில் குண்டு வீசியதாக இருவரை போலீசார் தேடி வந்தனர்.
இது தொடர்பாக, கருணாநிதி நகரில் வசிக்கும் எஸ்.டி.பி.ஐ., கட்சியைச் சேர்ந்த அப்துல் ரகுமான், 30, நேற்று கைது செய்யப்பட்டார்.மோகன் கடையில் குண்டு வீசியதாக, ஏற்கனவே முகமது ரபீக் கைது செய்யப்பட்டிருந்தார்.மேலும் துடியலுார் ஆர்.எஸ்., தோட்டத்தை சேர்ந்த பி.எப்.ஐ., அமைப்பைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான், 26, என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
செப்., 22ம் தேதி என்.எச்., ரோட்டில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது இருவர் கல் வீசி கண்ணாடியை உடைத்தனர். இந்த வழக்கில், உக்கடம் அன்பு நகர் எஸ்.டி.பி.ஐ., கட்சியைச் சேர்ந்த ஷாஜஹான், 41, என்பவர் கைது செய்யப்பட்டார்.அவர் பயன்படுத்திய மோட்டர் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.