அவிநாசி:வாகன ஓட்டிகளின் அசுர வேக பயணத்தால் விபத்தும், உயிர்ப்பலியும் அதிகரித்து வருகிறது.அவிநாசியில் இருந்து திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி ஏராளமான இளைஞர்கள் டூவீலரில் பயணிக்கின்றனர். சமீப நாட்களாக கோவை -- சேலம் சாலை, அவிநாசி - புளியம்பட்டி சாலையில் விபத்து அதிகரித்ததோடு, உயிர்பலியும் ஏற்படுகிறது. குறிப்பாக, ஆட்டையம்பாளையம் - எம்.நாதம்பாளையம் சாலை, தொடர் விபத்து நடக்கும் இடமாக மாறி வருகிறது.
இந்த சாலையில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை இருந்தாலும், இரவு நேரங்களில் தெரிவதில்லை. 'ரிப்ளெக்டிங் ஸ்டிக்கர்' இல்லாததால், வேகத்தடை இருப்பது தெரியாமல், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தை எதிர்கொள்கின்றனர் என்பதும், ஒரு காரணம்.இது விஷயத்தில், நெடுஞ்சாலை துறையினரும், தங்களது கடமையை சரிவர மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. வாகன போக்குவரத்து நிறைந்த 'பீக் அவர்ஸ்' எனப்படும், காலை, மாலை நேரங்களில், அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் சிறப்பு எஸ்.ஐ.,கள், 'போலீஸ் நோட்டீஸ்' எனப்படும், ரசீது புத்தகத்தை கையிலேயே வைத்திருப்பர்.'ஹெல்மெட்' அணியாமல் பயணிப்போர், அதிவேகமாக வாகனங்களை இயக்குவோருக்கு அபராதம் விதித்தும் வந்தனர். அபராதத்தை அதே இடத்திலோ அல்லது கோர்ட்டிலோ செலுத்தி கொள்ளலாம். அதேநேரம், போக்குவரத்து போலீசாரும் அபராத நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.திடீரென அபராதம் விதிக்கும் நடைமுறை நிறுத்தப்பட்டு, 'இ--சலான்' மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த நடைமுறை போக்குவரத்து போலீசாருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசில் போலீசார் பற்றாக்குறையால், ஒரு சில இடங்களில் மட்டுமே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.எனவே, உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கும் 'இ--சலான்' கருவி மூலம் அபராதம் விதிக்க அனுமதி வழங்க வேண்டும் அல்லது, பழையபடி 'போலீஸ் நோட்டீஸ்' முறையில் அபராதம் விதிக்கும் நடைமுறையை கொண்டு வந்தால் மட்டுமே, சாலை விதியை மதிக்காமல், அசுர வேக பயணம் மேற்கொள்வோருக்கு கடிவாளம் போட முடியும்.