புதுச்சேரி : போராட்டம் என்ற பெயரில் மின்தடை ஏற்படுத்துவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:ஜனநாயக முறையில் போராடுவது தவறல்ல. ஆனால் தேச விரோத கும்பல் மின்துறை ஊழியர்கள் என்ற பெயரில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மின்சாரத்தை துண்டித்து, அரசிற்கு எதிராக குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.போராட்டம் என்ற பெயரில் மின்தடை ஏற்படுத்துவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக மின்துறை அமைச்சரிடம் பேசி உள்ளோம்.பண்டிகை காலம் நெருங்குவதால் மின் ஊழியர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சமாதான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பா.ஜ., அல்லாத எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் மின்சார வினியோகத்தை தனியார் நிர்வகித்து வருகிறது.மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு ஒருபோதும், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடிய செயலை செய்யாது.
தி.மு.க., காங்., போன்ற எதிர் கட்சியினர் தவறான கருத்துக்களை கூறி மின்துறை நிர்வாகிகளை, பொதுமக்களை திசை திருப்பி வருகின்றனர். ஆனால் எக்காரணத்தை கொண்டும் ஊழியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.குஜராத், டில்லி போன்ற மாநிலங்களில் மின்துறை தனியார் மயமாக்கப்பட்டு தடையில்லா மின்சாரம், பல ஆண்டுகளாக மின்கட்டண உயர்வின்மை, மின் இழப்பின்மை, மின் திருட்டின்மை என சிறப்பான முறையில் சேவை செய்து வருகிறது.திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பொய்தகவல்களை பரப்பிவரும் எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டுகளை பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.