சேலம் : சுகவனேஸ்வரர் கோவில் உட்பிரகாரத்தில் புத்தக விற்பனை நிலையம் தயாராக உள்ள நிலையில், பக்தர்கள் எதிர்ப்பை மீறி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உட்பிரகாரத்தில் திருமாடபத்தி மண்டபத்தில், 1.65 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆன்மிக புத்தக விற்பனை நிலையம் அமைக்கப்பட்டது. மண்டப தன்மையை சிதைக்கும் செயல் என, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பணிகளை நிறுத்தி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின் மண்டப தொன்மை மாறாமல் பணி மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
இந்நிலையில் அப்பணி முடிக்கப்பட்டு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நேற்று அதன் முன்புறம் மாலை அணிவித்து, 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டது. தயாராக உள்ள விற்பனை நிலையத்தை, கோவில் நிர்வாகம் சார்பில் புகைப்படம் எடுத்து, சென்னை, அறநிலைத்துறை கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: புத்தக நிலையம் அமைப்பது நல்லது. அதை உட்பிரகாரத்தில் வைக்காமல் வெளிபிரகார பகுதியில் அமைத்திருக்கலாம். அப்படி செய்தால் பக்தர்களுக்கு இடையூறின்றி, மண்டப தொன்மை பாதுகாக்கப்படும். ஆனால் விற்பனை நிலைய மரக்கட்டைகள் மண்டப சுவரில், 'பெவிகால்' போட்டு ஒட்டப்பட்டுள்ளள. அவை சரியான பிடிமானமின்றி சரிந்து விழ வாய்ப்புள்ளது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோவில் உதவி கமிஷனர் ராஜா(பொ) கூறுகையில், ''புத்தக விற்பனை நிலையம் தயாராக உள்ளது. துறை சார்பில் திறப்பதற்கான நாள் அறிவித்ததும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். நிலையத்தை இடமாற்ற கருத்து வந்தால் பரிசீலிக்கப்படும்,'' என்றார்.