புதுச்சேரி : மின் துறையை தனியார் மயமாக்கும் புதுச்சேரி அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி அரசு, மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி நேற்று 30ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தி.மு.க., காங்., இந்திய கம்யூ., மா.கம்யூ., வி.சி., ம.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் நேற்று மாலை 5:00 மணி அளவில் புதுச்சேரி அண்ணா சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.அதனையொட்டி, மறியலில் ஈடுபட்ட எதிர்கட்சி தலைவர் சிவா, காங்., மாநில தலைவர் சுப்ரமணியன், இந்திய தொழிற்சங்க மைய பத்மநாபன், இந்திய கம்யூ., சலீம், வி.சி., பொழிலன், உள்ளிட்ட 120 பேரை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இரவு 7 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.