மதுரை--'மத்திய ரிசர்வ் வங்கி 2022--23ம் நிதியாண்டில் 4வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் அதிகரித்திருப்பதால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பாதிக்கும்' என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: இம்மாதம் நடந்த நிதிக்கொள்கை கூட்டத்தில் மத்திய ரிசர்வ் வங்கி 2022--23ம் நிதியாண்டில் 4வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதத்திலிருந்து 0.50 சதவீதமாக உயர்த்தி 5.90 சதவீதமாக அதிகரித்துள்ளது. சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், ஜி.டி.பி., விகிதத்தில் மாற்றமில்லா நிலையில் ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.இந்த வட்டி உயர்வால் வீடு, வாகன, தனிநபர், நகைக் கடன் வட்டி, மாதத் தவணை தொகை கூடுதலாகும். உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் பெரிய பாதிப்பை உருவாக்கியுள்ளது. சமையல் எண்ணெய் விலை மிகவும் அதிகரித்துள்ளதால் சரஸ்வதி பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வீட்டுச் செலவுகள் உயரும்.ஏற்கனவே கடும் நிதிநெருக்கடி, அத்யாவசிய பொருட்களின் விலையேற்றம், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு, வேலையின்மை, பணவீக்கத்தால் அவதிப்படும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையினர், மக்கள் கூடுதல் நிதி நெருக்கடியை சந்திப்பர்.ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க முன்வர வேண்டும், என்றார்.