புவனகிரி: புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 'டெண்டர்' பெற்று தருவதாக, ஒப்பந்ததாரரிடம் பணம் பெற்று மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், பீமா நகர், கொட்டக் கொல்லித் தெருவை சேர்ந்தவர் பாலசுந்தரம் மகன் பாலசுப்ரமணியன், 39; அரசு சார்ந்த ஒப்பந்தப் பணிகளை செய்கிறார்.இவருக்கு கடலுார் மாவட்டம், மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் எல்.இ.டி., மின் விளக்குகளை அரசு ஒப்பந்த அடிப்படையில் அமைக்க, டெண்டர் பெற்று தருவதாக, புவனகிரி தாலுகா, பு.ஆதனுார் அகரம் ஆலம்பாடியை சேர்ந்த வைத்தியநாதசாமி மகன் ஜெயசீலன், 62, உறுதியளித்தார்.
இதற்காக, பல தவணை களாக 23 லட்சம் ரூபாய் பெற்றார். ஆனால், பேசியபடி எல்.இ.டி., மின் விளக்குகள் அமைப்பதற்கான டெண்டரை பெற்றுக் கொடுக்காமல் ஜெயசீலன் காலம் கடத்தியுள்ளார்.இதனால், தான் கொடுத்த பணத்தை பாலசுப்ரமணியன் திருப்பி கேட்டுள்ளார். தராததால், போலீசில் பாலசுப்ரமணியன் புகார் அளித்தார்.ஜெயசீலன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜா, ரமேஷ் மீது மோசடி வழக்கு பதிந்து புவனகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.