காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி திருக்காலிமேடு அரசு உயர்நிலை மற்றும் தொடக்கப்பள்ளி வழியாக, திருவீதிபள்ளத்தில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்குக்கு பல ஆண்டுகளாக கழிவு நீர் லாரி மற்றும் குப்பை லாரி வேகமாக செல்வதால் அப்பகுதியில், அடிக்கடி விபத்து நடந்து வந்தது.
இதையடுத்து அரசு பள்ளி வழியாக கழிவு நீர் லாரி செல்ல தடை விதிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதி கவுன்சிலரும், மாநகராட்சி துணை மேயருமான குமரகுருநாதன், மாநகராட்சி குப்பை கிடங்குக்கு செல்லும் வழியில் கேட் அமைத்து அந்த சாலையை மூட நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில், இரும்பு கேட் திறக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக திருக்காலிமேடு அரசு பள்ளி வழியாக கழிவு நீர் மற்றும் குப்பை லாரிவேகமாக சென்று வந்தது. இதனால், மாணவ -மாணவியர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, திருக்காலிமேடு வழியாக கழிவு நீர் லாரி மற்றும் குப்பை லாரி செல்லாம் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதை தொடர்ந்து துணை மேயர் குமரகுருநாதன், அரசு பள்ளி வழியாக கழிவு நீர், குப்பை லாரி செல்வதை தடுக்க வேண்டும் என, மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனரிடம் வலியுறுத்தினார்.மாநகராட்சி சார்பில், குப்பை கிடங்குக்கு லாரி செல்லும் வழியில் கேட் மூடப்பட்டு பூட்டு போடப்பட்டுள்ளது. கழிவு நீர் லாரி மற்றும் குப்பை லாரி அரசு பள்ளி வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருக்காலிமேடு பகுதி மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.