உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அருகே அரும்புலியூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில், கரும்பாக்கம், மாம்பாக்கம், காவணிப்பாக்கம், பேரணக்காவூர், சீத்தாபுரம், அரும்புலியூர் ஆகிய கிராமங்கள் உள்ளன.
அரும்புலியூர் அடுத்து பழவேரி ஊராட்சி உள்ளது. அரும்புலியூர், திடீர் நகரில் சில ஆண்டுகளுக்கு முன் துணை சுகாதார நிலையம் ஏற்படுத்தப்பட்டது. துவங்கப்பட்ட அடுத்த சில ஆண்டுகளில், போக்குவரத்து வசதியின்மை, மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறை உள்ளிட்ட நிர்வாக சீர்கேடு காரணங்களால் துணை சுகாதார நிலையம் மூடப்பட்டது.
இதனால், அப்பகுதி வாசிகள், மருத்துவ தேவைக்கு படூர் அல்லது சீட்டணஞ்சேரி பகுதியில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருகின்றனர். துணை சுகாதார நிலையம் செயல்படாமல் மூடப்பட்டுள்ளதால், கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் உள்ளிட்ட அவசர சிகிச்சைகள் உடனுக்குடன் பெற முடியாமல் தவிப்பதாகவும், இதனால், துணை சுகாதார நிலையத்தை திறந்து, செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.