உத்திரமேரூர்:-காஞ்சிபுரம், கலெக்டர் அலுவலகலத்தில் நடந்த, விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
உத்திரமேரூரில் இருந்து, தண்டரைப்பேட்டை வழியாக மதுராந்தகம் வரை இயங்கும் தடம் எண் 89 ஏ, என்ற அரசுப் பேருந்து, உத்திரமேரூர் தடத்தில் இயக்கப்படுவதற்கு மாறாக, 76சி என்ற தடம் எண்ணாக மாற்றம் செய்து, பூந்தமல்லி மார்க்கமாக இயக்கப்படுகிறது.
உத்திரமேரூரில் இருந்து, எலப்பாக்கம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட வேண்டிய 77ஏ, என்ற பேருந்து, தடம் எண் 121 என மாற்றப்பட்டு, தாம்பரம்- திண்டிவனம் மார்க்கமாக இயக்கப்படுகிறது. இதேபோன்று, உத்திரமேரூரில் இருந்து, தாம்பரம் இயக்க வேண்டிய, தடம் எண் 504 மற்றும் 561 ஆகிய அரசுப் பேருந்துகள், தடம் எண் 79 என மாற்றம் செய்து, காஞ்சிபுரம்- - தாம்பரம் மார்க்கமாக இயக்கப்படுகிறது.எனவே, இப்பேருந்துகளை உரிய தடத்தில் முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உத்திரமேரூர் பணிமனை மேலாளர் கருணாகரன் கூறியதாவது:தவிர்க்க முடியாத ஒரு சில நேரங்களில், அரசுப் பேருந்துகள் ரூட்டு மாற்றி இயக்கப்படும்.உத்திரமேரூர் பணிமனையில் இருந்து, எந்த பகுதிக்கு பேருந்து இயக்கப்பட வேண்டுமோ, அப்பகுதிகளுக்கு ஒரு நாளும், நிறுத்தம் செய்யாமல் முறையாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்து மாறுமே தவிர, எந்த தடத்திலும் பேருந்து இயக்காமல் நிறுத்தம் செய்தது இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.