ராமநாதபுரம்:-ராமநாதபுரம் பி.டி.ஓ., செப்., 30ல் ஓய்வு பெற இருந்த நிலையில், செப்.,27ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அ.தி.மு.க., ஆட்சியில் எல்.இ.டி., தெரு விளக்குகள், எர்த் ஒயர் அமைப்பதில் உள்ளாட்சி துறையில் ஊழல் நடந்துள்ளதாக, 2019ல் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., புகார் கூறியது. அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.
எஸ்.பி., வேலுமணியுடன் உள்ளாட்சித் துறையில் பணியாற்றிய அதிகாரிகளும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். குறிப்பாக பி.டி.ஓ.,க்கள் பலர் தமிழகம் முழுதும் துறை ரீதியாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய மூன்று பி.டி.ஓ.,க்கள் மீது மதுரையில் அமைக்கப்பட்ட ஒழுங்குமுறை நடவடிக்கை தீர்ப்பாயத்தில் விசாரணை நடக்கிறது.
குற்றம் சாட்டப்பட்ட பி.டி.ஓ.,க்களிடம் விசாரணை நடக்கும் நிலையில்,பணிஓய்வு பெறுதை நிறுத்தி வைக்கும் வகையில் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.அதன்படி ராமநாதபுரம் பி.டி.ஓ., தங்கப்பாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் செப்.,30ல் ஓய்வுபெற இருந்த நிலையில் செப்.,27ல் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் இரண்டு பி.டி.ஓ.,க்கள் மீது விசாரணை நடக்கிறது.