பெரியகுளம்:தேனி மாவட்டம், பெரியகுளம் வடக்குமலை காப்பு காட்டில் சிறுத்தை கொலையான சம்பவத்தில் ஆட்டுக்கிடை பராமரிப்பாளர் அலெக்ஸ் பாண்டியன் 35, கைது செய்யப்பட்டார்.
நிலத்தின் உரிமையாளர்கள் ரவீந்திரநாத் எம்.பி., உட்பட 3 விவசாயிகளிடம் விசாரிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.பெரியகுளம் அருகே வரட்டாறு வடக்கு மலை காப்புகாட்டில் தென்கரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் உள்ளது. இங்குள்ள காப்புக்காடு எல்லையில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் செப்., 27 காலை பெண் சிறுத்தை உயிருக்கு போராடுவதாக ரேஞ்சர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. உதவி வனப் பாதுகாவலர் மகேந்திரன் தலைமையில் வனத்துறையினர் பெண் சிறுத்தையை காப்பாற்றினர். அப்போது உதவி வனப்பாதுகாவலரை சிறுத்தை தாக்கியது. மறுநாள் இரண்டு வயது ஆண் சிறுத்தை சோலார் மின்வெளி கம்பி வயிற்றுப் பகுதியில் சுற்றி வாயில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தது.
வனத்துறையினர் மேற்பார்வையில் பிரேத பரிசோதனை நடந்தது.வனத்துறை விசாரணை: சிறுத்தை இறந்ததை தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில்தேனி அருகே பூதிப்புரத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் 35. இந்தப் பகுதியில் ஆட்டுக்கிடை அமைத்திருந்தார். சில நாட்களாக கிடையில் இரு ஆடுகள் சிறுத்தைக்கு பலியாயின. அதனால் சோலார் மின்வேலியில் சுருக்கு கம்பி அமைத்து சிறுத்தை கொல்லப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதன் அடிப்படையில் அலெக்ஸ் பாண்டியனை கைது செய்தனர். தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நீதிபதி லலிதா ராணி, அலெக்ஸ் பாண்டியனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.ரேஞ்சர் செந்தில்குமார் கூறுகையில், ''நிலத்தின் உரிமையாளர்கள் ரவீந்திரநாத் எம்.பி., காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோரிடம் விசாரணை செய்யப்பட உள்ளது'' என்றார்.--