கோவை:'மழை காரணமாக நெல் ஈரமாகியுள்ளது. குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் காய்வதில்லை. இதனால், அரசு மையங்களில் நெல் கொள்முதல் செய்ய மறுக்கின்றனர்' என, கோவை கலெக்டரிடம், ஆனைமலை வட்டார விவசாயிகள் முறையிட்டனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில், 6,500 ஏக்கருக்கு விவசாயிகள் நெல் சாகுபடி செய்து, 3,500 ஏக்கருக்கு அறுவடை செய்யப்பட்டுள்ளது.அரசு கொள்முதல் நிலையத்தில், நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவை விட நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால், வாங்க மறுத்துள்ளனர்.
இதனால், 4,000 நெல் மூட்டைகள் தேக்கமாகியுள்ளன.கோவை கலெக்டர் சமீரனை விவசாயிகள் நேரில் சந்தித்து, ஈரப்பதமான நெல் மாதிரியை காண்பித்து முறையிட்டனர். அதிகாரிகளிடம் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் உறுதியளித்தார். விவசாயி பட்டீஸ்வரன் கூறுகையில், ''நெல்லில், 16 சதவீதமே ஈரப்பதம் இருக்க வேண்டும் என்கின்றனர். மழையால், 19 சதவீதம் இருப்பதால் கொள்முதல் செய்ய மறுக்கின்றனர்.
''குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் நெல் காய்வதில்லை. இன்னும் சில நாட்களில் முளை விட்டு விடும் என்பதால், பொருளாதார ரீதியாக விவசாயிகள் பாதிக்கப்படுவர். ஈரப்பதமான நெல்லை கொள்முதல் செய்ய கேட்டு முறையிட்டு உள்ளோம்,'' என்றார்.