திருப்பூர் நஞ்சராயன் குளத்தில், சைபீரியாவில் இருந்து வந்துள்ள புதுவகை பறவை நேற்று கண்டறியப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி எல்லையில் உள்ள, நஞ்சராயன் குளத்தில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வலசை வந்து செல்கின்றன. பல்வேறு நாடுகளில் இருந்து, பறவைகள் இங்கு வந்து, குளிர்காலங்களில் தங்கிச் செல்வது வழக்கம்.கடந்த ஒரு வாரமாக, திருப்பூர் இயற்கை கழகத்தினர், குளத்தில் உள்ள பறவைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து கேமரா பதிவும் செய்து, அதன் மூலம் பறவைகள் வரவை கண்டறிந்து வருகின்றனர். இந்நிலையில், ஐரோப்பியா மற்றும் சைபீரியா பகுதிகளில் காணப்படும், வளை மூக்கு மண் கொத்தி பறவை நேற்று கண்டறியப்பட்டுள்ளது.திருப்பூர் இயற்கை கழகத்தினர் கூறுகையில், 'நஞ்சராயன் குளத்திற்கு இதுவரை 184 வகை பறவைகள் வந்து செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், சைபீரியாவில் இருந்து, வளை மூக்கு மண் கொத்தி பறவை ஒன்று வந்திருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன், பறவைகள் வகை 185 ஆக உயர்ந்துள்ளது.பறவைகள், தென்கிழக்கு கடற்கரை ஓரமாக வலசை சென்று வரும் உள்நாட்டு நீர்நிலைகளில் இவற்றை காண்பது அரிது. அரிய வகை பறவையான இப்பறவை, திருப்பூர் நஞ்சராயன் குளத்துக்கு வந்துள்ளது,' என்றனர்.