பந்தலுார்:தேயிலை செடிகளை சிவப்பு சிலந்தி நோய் தாக்கி வருவதால், நீலகிரி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், பந்தலுாரில் தனியார் மற்றும் அரசு தேயிலை தோட்டங்கள் உள்ளன. சிறு விவசாயிகளும் அதிகளவில் தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர்.மகசூல் குறைவு, விலை குறைவு, இடுபொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால், தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் மழைக்காலங்களில், மேகமூட்டம் காரணமாக கொப்புள நோய் ஏற்பட்டு தேயிலைச்செடிகள் கருகுகின்றன. தற்போது லேசான வெயில் தலைகாட்டும் நிலையில், ஓரளவு இலை வரத்து உள்ளது.ஆனால், தேயிலைச்செடிகளை சிவப்பு சிலந்தி நோய் தாக்க துவங்கியுள்ளது. இதனால், இலை கருஞ்சிவப்பு நிறத்துக்கு மாறி வருகிறது. மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.பந்தலுாரை சேர்ந்த விவசாயி விஜயகுமார் கூறுகையில், ''நோயை கட்டுப்படுத்த போதிய மருந்துகளை, தேயிலை வாரியம் குறைந்த விலைக்கு வழங்கினால் பயனாக இருக்கும்,'' என்றார்.