சென்னை: சென்னையில் இரண்டு மாதங்களில், 600 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால், வீடு வீடாக கள ஆய்வில் ஈடுபட, கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அடையாள அட்டையுடன் வரும் பணியாளர்களை, வீடுகளில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டுமென, மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
நன்னீரில் வளரக்கூடிய, 'ஏடிஸ்-எஜிப்டி' வகை கொசுவால் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவுகிறது. இந்த வகை கொசுக்கள், மழைக்காலங்களில் அதிகளவில் உற்பத்தியாகின்றன. குறிப்பாக, கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் துவங்கும் போது, மொட்டை மாடி, திறந்தவெளி இடங்களில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருக்கும் பொருட்களில் மழை நீர் தேங்கும் போது, அதில் இவ்வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன.
இந்த வகை கொசு கடிப்பதால், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு, டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. அதன்படி, மாநிலம் முழுதும் இந்தாண்டில், இதுவரை 5,000க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஆகஸ்ட் மாதத்தில் 291 பேர், செப்., மாதத்தில் 309 பேர் என, இரண்டு மாதங்களில் 600 பேர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், தடுப்பு நடவடிக்கையை மாநகராட்சி எடுத்து வருகிறது. அதன்படி, குடிசை வாழ் மக்கள் வாழும் பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை அடித்தல், நீர்நிலைகளில் மருந்து தெளித்தல் போன்ற பணிகளை மாநகராட்சி செய்து வருகிறது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன்படி, கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள, 2,084 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு, 954 கொசு ஒழிப்பு நிரந்தர பணியாளர்கள், 2,317 ஒப்பந்த பணியாளர்கள் என, 3,271 பணியாளர்கள் வாயிலாக, கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மழைநீர் வடிகால்களில் கொசுப் புழுக்களை அழிக்க, வார்டுக்கு கொசு மருந்து தெளிப்பான்களுடன், இரண்டு நபர்கள் என, 200 வார்டுகளுக்கு 400 பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.ஒரு குழுவிற்கு இரண்டு நபர்கள் என, தினசரி 1 கி.மீ., நீளத்திற்கு கொசு மருந்து தெளிக்க வேண்டும். ஒரே இடத்தில் வாரத்திற்கு ஒருமுறை, கண்டிப்பாக தெளிக்க வேண்டும்.
மேலும், 247 கி.மீ., நீர்வழித்தடங்களில் கொசு மருந்து தெளிக்க, 128 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஒரு குழுவிற்கு மூன்று நபர்கள் என, நீர்வழித்தடங்களில் தினசரி, 1 கி.மீ., துாரத்துக்கு மருந்து தெளிக்கப்படுகிறது.குடிசை பகுதிகள், பூங்காக்கள், சாலைகள் ஆகிய பகுதிகளில் புகை பரப்பும் இயந்திரங்கள் வாயிலாக கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் 6:00 முதல் மாலை 7:30 மணி வரை, புகை பரப்பும் இயந்திரங்கள் வாயிலாக கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகின்றன.மாநகராட்சி பணியாளர்கள், 10.98 லட்சம் வீடுகளில் கள ஆய்வில் ஈடுபட்டதில், 9,117 வீடுகளில் கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திறந்தவெளி கிணறுகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்கள், காலிமனைகள் ஆகிய இடங்களில், மாநகராட்சி களப் பணியாளர்கள் வாயிலாக ஆய்வு செய்யப்பட்டு, கொசுப்புழு வளரிடங்கள் அழிக்கப்படுகின்றன.தற்போது மழை பெய்து வருவதால், மழை நீர் தேங்கக்கூடிய இடங்களில் கொசுப் புழுக்கள் வளர வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமென்ட் தொட்டிகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும்.
தண்ணீர் நிரம்பிய பூ ஜாடி மற்றும் குளிர்பதன பெட்டியின் கீழ்த்தட்டு, மணிபிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரம் ஒரு முறை அகற்றி, சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும்.வீடுகளில் கள ஆய்வு மேற்கொள்ள, மண்டல சுகாதார அலுவலரால் வழங்கப்பட்ட மாநகராட்சி அடையாள அட்டையுடன் வரும் பணியாளர்களுக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.