கரூரில் போலீஸ் உத்தரவை மதிக்காமல், மினி பஸ்கள் இயக்கப்படுவதால் தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கரூர் மினி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 30க்கும் மேற்பட்ட மினி பஸ்கள், பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.
கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா கார்னர் பகுதியில், எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்நிலையில், கரூர் மினி பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லும் மினி பஸ் டிரைவர்கள், நினைத்த இடத்தில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் கூடுதலாக நெரிசல் ஏற்பட்டு, வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில், மினி பஸ்களை, ஸ்டாப் இல்லாத இடங்களில் நிறுத்த கூடாது என, போலீசார் பலமுறை எச்சரித்தும், மினி பஸ் டிரைவர்கள் அதனை கண்டுகொள்வதில்லை.
வரும் 24ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் புத்தாடைகள், நகைகள் மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் வாங்க, கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கரூர், ஜவஹர் பஜார், மனோகரா கார்னர் பகுதிக்கு வருகின்றனர்.
ஏற்கனவே இங்குள்ள சில வர்த்தக நிறுவனங்களுக்கு வருகிறவர்கள், கார், டூவிலர் உள்ளிட்ட வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு பல மணி நேரம் கழித்து வாகனங்களை எடுக்கின்றனர்.
குறிப்பிட்ட வர்த்தக நிறுவனங்கள் முன்னால், நிறுத்தப்படும் வாகனங்களை கரூர் சட்டம் - ஒழுங்கு போக்குவரத்து போலீசார், 'ஏனோ' கண்டுகொள்வதில்லை.
தீபாவளி பண்டிகையை ஒட்டி ஏற்படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து பணம், தங்க நகைகளை, மர்ம நபர்கள் பறித்து செல்ல வாய்ப்புண்டு.
எனவே, கரூர், ஜவஹர் பஜாரில், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதையும், ஸ்டாப் இல்லாத இடங்களில் மினி பஸ்களை நிறுத்தும் மினி பஸ் டிரைவர்கள் மீதும், கரூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பது அவசியம்.