அரவக்குறிச்சியை சேர்ந்த வியாபாரி, அவரது மகள் உள்பட மூன்று பேர், ஆற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி பலியாகினர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியை சேர்ந்தவர் சேக் பரீத், 40; வியாபாரி. மகள் மவுபியா, 12; உறவினர் ரியாஜூதீன், 38; ஆகியோருடன், அம்மாபட்டியில் உள்ள தர்காவுக்கு தொழுகை நடத்த நேற்று சென்றார். பிறகு மூவரும் கரூர்-திண்டுக்கல் மாவட்ட எல்லை அருகேயுள்ள பண்ணப்பட்டி குடகானாற்றில் குளிக்க சென்றனர்.
நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் அடுத்தடுத்து மூவரும் மூழ்கினர். அரவக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள், தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் மூவரின் உடல்களையும் மீட்டு, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
நீரில் மூழ்கி பலியான சிறுமி மவுபியா, தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். ரியாஜூதீன் ஜவுளி வியாபாரி என்றும், அரவக்குறிச்சி போலீசார் தெரிவித்தனர்.
ஆற்றில் மூழ்கி மூன்று பேர் பலியானது, பள்ளப்பட்டி பகுதியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியது.