கோவை;சின்னவேடம்பட்டி ஏரி புனரமைக்கும் களப்பணியில், நேற்று பள்ளிக்குழந்தைகள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.கோவை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள, பிரதான ஏரியான சின்னவேடம்பட்டி ஏரி, 200 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த ஏரியை புனரமைத்து, நீர் நிறைப்பதற்கான முயற்சிகளை தன்னார்வ அமைப்பினர் மேற்கொண்டுள்ளனர்.இதன் 234வது களப்பணி நேற்று நடந்தது. இன்னர்வீல் அமைப்பின் 47ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சின்னவேடம்பட்டி ஏரியில் 8 வகை நாட்டு மரக்கன்றுகள், 47 எண்ணிக்கையில் நடவு செய்யப்பட்டன. ஏரியில் அமைக்கப்பட்டுள்ள நம்மாழ்வார் வனத்தில், இந்த கன்றுகளை இன்னர்வீல் 301ம் அமைப்பினர் நடவு செய்தனர்.இயற்கையின் மீது புரிதல் ஏற்படவும், நீர் நிலை காக்கும் பணியில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படவும் வசதியாக, ஜி.ஆர்.டி., கல்லுாரி மாணவர்களை, சின்னவேடம்பட்டி ஏரி களப்பணியில் ஈடுபடுத்துவதாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லுாரி தாளாளர் கீதா பத்மநாபன் உறுதி அளித்தார்.இன்னர்வீல் சங்க தலைவர் சசிகலா, ஏரி காக்கும் பணியில் சங்கத்தினர் தொடர்ந்து ஈடுபடுவர் என்று உறுதி கூறினார். பள்ளி மாணவ, மாணவியருக்கு நீர் நிலைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, பறவைகள் காணுதல், இலவச ஓவியப்பயிற்சி, ஓவியப்போட்டிகள் என தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பணிகளை, இன்னர்வீல் சங்கத்தினர் பாராட்டினர்.