சென்னை:சென்னை அரும்பாக்கத்தில், கூவம் ஆற்றின் ஓரத்தில், 19 மாடி குடியிருப்புகளை கட்டும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நிபந்தனைகளை செயல்படுத்த வேண்டும் என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
'அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றின் ஓரத்தில் 19 மாடிகளுடன், 304 வீடுகள் கொண்ட குடியிருப்பு வளாகத்தை உருவாக்க, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனால், மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது. சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். எனவே, இத்திட்டத்திற்கு அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்' என, அரும்பாக்கத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவர், 2021-ல் பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், மத்திய - மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் வகுத்துள்ள நிபந்தனைகளை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
குடியிருப்பு வளாகத்தின் மொத்த பரப்பில், 15 சதவீதம், பசுமை பரப்பாக இருக்க வேண்டும். இந்த இடத்தை வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தக் கூடாது. எதிர்காலத்தில் வெள்ளப் பெருக்கை தடுக்கும் வகையில், முறையான வடிகால், மழைநீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும்.குடியிருப்புகளில் இருந்து குப்பையை, கூவம் ஆற்றில் கொட்டக் கூடாது. கட்டுமானத்தின்போதும் கூவம் ஆற்றில் எந்தப் பொருளையும் வைக்க கூடாது. நிபந்தனைகளை, வீட்டு வசதி வாரியம் செயல்படுத்துகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அரசு துறைகள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.