ஆர்.கே.பேட்டை,--ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிமணி, 60. இவர், கடந்த மாதம் 12ம் தேதி இரவு, ஆர்.கே.பேட்டையில் இருந்து, அம்மையார்குப்பம் செல்ல பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த நபர், அம்மையார்குப்பம் செல்வதாகவும், துளசிமணியை இறக்கி விடுவதாகவும் வலிய அழைத்துள்ளார்.
அவரது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து சிறிது துாரம் சென்றதும், துளசிமணியின் மொபைல்போனை கேட்டுள்ளார் இருசக்கர வாகன ஓட்டி. மொபைல்போனை வாங்கி பேசிக் கொண்டிருந்த போது, துளசிமணி இறங்கியுள்ளார்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வாகன ஓட்டி மொபைல் போனுடன் டூ - வீலரில் வேகமாக சென்று விட்டார். இது குறித்த புகாரின்படி, சம்பந்தப்பட்ட நபரை, ஆர்.கே.பேட்டை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று அவரை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர். விசாரணையில், மொபைல் போனை பறித்து சென்றது ஆர்.கே.பேட்டை அடுத்த, ஆதிவராகபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 44, என தெரிந்தது. அவரிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.