கோயம்பேடு, :கோயம்பேடு சந்தையில் ஆண்டுதோறும் ஆயுத பூஜை, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையின் போது, அங்காடி நிர்வாக குழு சார்பில், பூஜை பொருட்கள் விற்பனைக்காக, பூ மார்க்கெட்டில், சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் சிறப்பு சந்தை திறக்கப்படவில்லை. இவ்வாண்டு, ஆயுத பூஜையை முன்னிட்டு, 30 ம்தேதி, சிறப்பு சந்தை திறக்கப்பட்டது. நேற்று, பூஜைப் பொருட்களை வாங்க கோயம்பேடில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
இதனால், கோயம்பேடு சந்தை மற்றும் அதை சுற்றியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு படி அவல் 80 - 150 ரூபாய், பொட்டுக் கடலை 50 - 120, பூசணிக்காய் ஒரு கிலோ 20 - 30, 10 எண்ணிக்கை கொண்ட வாழைக்கன்று கட்டு 100 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.வாழை இலை ஒன்று, 5 - 8 ரூபாய்க்கும், 25 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு தோரணங்கள் 50 ரூபாய்க்கும் விற்பனையானது. இதேபோல், பூக்கள் விலையும் உயர்ந்திருந்தது. அதிகரித்து காணப்பட்டது
1 கிலோ சாமந்தி - 160 - 240 ரூபாய்க்கும், சாக்லேட் ரோஸ், 160 - 200, பன்னீர் ரோஸ், 100 - 120, மல்லிகை - 750 - 900, முல்லை - 600 - 700, ஜாதி, 360 - 400,அரளி, 250 ரூபாய்க்கும் விற்பனையானது. 1.5 அடி மலர் மாலை 150 ரூபாய்க்கும், 2 அடி மாலை 200 ரூபாய்க்கும், 3 அடி மாலை 300 ரூபாய்க்கும் விற்பனையானது.