சென்னை,
கால்வாயை ஒட்டி, கடைகள் அதிகம் உள்ளன. பெரும்பாலான கடை உரிமையாளர்கள், குப்பையை கால்வாயில் கொட்டினர். இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, ஒவ்வொரு மழைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.வேளச்சேரி, இரண்டடுக்கு மேம்பால பணியுடன், 700 மீட்டர் நீள கால்வாய், மூடு கால்வாயாக மாற்றப்பட்டது. மீதமுள்ள ௧ கி.மீ., நீளமுள்ள திறந்தவெளி கால்வாயை, மூடு கால்வாயாக மாற்ற, 15 கோடி ரூபாயை நெடுஞ்சாலைத்துறை ஒதுக்கியது. இதற்கான பணி, 2019ல் துவங்கியது.கால்வாயின் பக்கவாட்டு சுவரை அகற்றி, ௧ அடி அகலத்தில் கான்கிரீட் கலவையால் சுவர் பலப்படுத்தப்பட்டது. குப்பை மற்றும் ஆகாய தாமரை கால்வாய்க்குள் சென்று அடைப்பு ஏற்படாத வகையில், உபரி நீர் வெளியேறும் கால்வாய் பகுதியில், 50 அடியை திறந்தவெளியாக விட்டு, மீதமுள்ள பகுதி முழுதும் மூடு கால்வாயாக கட்டப்பட்டது.துார் வாரும் 'ரோபோடிக் பாப்காட்' இயந்திரத்தை கால்வாயில் இறக்கும் வகையில், நுழைவு வாயில் தடிமனான 'சிலாப்' அமைத்து மூடப்பட்டது.
அதேபோல், விஷவாயு தாக்குவதை தடுக்க மற்றும் அடைப்பு பகுதியை கண்டறிய, கிரேட்டிங் சல்லடை அமைக்கப்பட்டது. இந்த பணிகள், கடந்த மாதம் முடிவடைந்தது.இந்நிலையில், பக்கவாட்டு பகுதியில், 8 அடி அகலத்தில் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை, இம்மாதம் இறுதியில் முடிக்க, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.மூடுகால்வாய் அமைத்தபோது, அதையொட்டி உள்ள கடைக்காரர்கள், கால்வாயில் மண் கொட்டி மூடி, சாய்வு தளம் அமைத்தனர். அதை அகற்றிவிட்டு, நடைபாதை கட்டமைப்பு அமைக்கப்படுகிறது. நடைபாதையை ஆக்கிரமிக்காத வகையில், 5 அடி இடைவெளியில் இரும்பு கம்பி நட வேண்டும்.இதுதான், தற்போதைய நடைமுறை. ஆனால், இங்கு இரும்பு கம்பி நடாமல் கட்டமைக்கப்படுகிறது.
இதனால், நடைபாதையை புதைத்து, அதன் மீது சாய்வுதளம் அமைத்து ஆக்கிரமிக்கப்படும். இதை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.மூடு கால்வாய் அமைத்ததால், விரைவு சாலையின் அகலம் அதிகரித்தது. நெரிசலும் குறையும். அதேவேளையில், நடைபாதையை புதைத்து, அதன் மீது கட்டமைப்பு அமைக்க வாய்ப்புள்ளது. இதனால், நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். விபத்து நடக்கவும் வாய்ப்புள்ளது. நடைபாதையை சேதப்படுத்தாமல், புதைக்காமல் கட்டடத்தின் உள்பகுதியில் சாய்வு தளம் அமைக்கும் வகையில், கட்டட உரிமையாளர்களை அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும்.