மெரினா, :வங்கி ஊழியர் உட்பட இருவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்; மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.கோயம்பேடு, பாடி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அகில் வர்க்கிஸ் பால், 29; தனியார் வங்கி ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, காமராஜர் சாலை அருகில் மெரினா கடற்கரை மணற்பரப்பில் நடந்து சென்றார்.அப்போது, அவரை வழிமறித்த சிறுவர்கள் உட்பட மூவர், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அகில் வர்க்கிஸ் பால் பணம் தர மறுத்ததால், பீர் பாட்டிலால் அவரை தாக்கி மொபைல் போனை பறித்து தப்பினர்.
காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து விசாரிக்கும் மெரினா போலீசார், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சபரி, 22, மற்றும் 14 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 17 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.அதேபோல், எம்.ஜி.ஆர்., நகர், வள்ளல் பாரி தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய்குமார் 24; மெக்கானிக்.இவர், நேற்று நள்ளிரவு பணி முடிந்து, தன் நண்பருடன் இருசக்கர வாகனத்தில், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவர்களை பின் தொடர்ந்து, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், வழிமறித்து கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.சஞ்சய்குமார் பணம் தர மறுத்ததால், மர்ம நபர்கள் அவரை தாக்கி, 1,000 ரூபாயை பறித்து தப்பினர். இது குறித்து, தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அஜய், 20, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், 19, ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து, 500 ரூபாய், இருசக்கர வாகனம் மற்றும் கத்தியை பறிமுதல் செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான சந்தோஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.