சென்னை:சென்னை பெருநகர் பகுதி விரிவாக்கத்தில் இரண்டு புதிய மண்டல அலுவலகங்கள் ஏற்படுத்த சி.எம்.டி.ஏ., திட்டமிட்டு உள்ளது.சென்னை பெருநகர் பகுதி தற்போது, 1,189 சதுர கி.மீ.,யாக உள்ளது. இதில் சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.இதை ஒட்டியுள்ள பகுதிகளில் நகர்ப்புற வளர்ச்சியின் வேகத்தை கருத்தில் வைத்து, சி.எம்.டி.ஏ., எல்லையை விரிவாக்க முடிவு செய்யப்பட்டது.இதன்படி, முதலில், 8,870 சதுர கி.மீ., பரப்பளவுக்கு விரிவாக்க திட்டம் உருவாக்கப்பட்டு, பொது மக்கள் கருத்து கேட்கப்பட்டது.
இதில் சில இடங்களில் விரிவாக்கத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, சென்னை பெருநகர் விரிவாக்கத்தின் பரப்பளவு, 5,800 சதுர கி.மீ.,யாக குறைக்கப்பட்டு, புதிய வரைவு அறிக்கை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் நிர்வாக சீரமைப்புக்கான சில மாற்றங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, சி.எம்.டி.ஏ., தற்போது எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் மட்டும் செயல்பட்டு வருகிறது.
இதற்கு மண்டல அளவில் அலுவலகங்கள் இல்லை.சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கத்தின் போது, தெற்கில் ஒன்று, வடக்கில் ஒன்று என இரண்டு மண்டல அலுவலகங்களை ஏற்படுத்த சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது. தற்போதைய சி.எம்.டி.ஏ., அலுவலகம் மத்திய மண்டலத்துக்கான அலுவலகமாகவும், தலைமை அலுவலகமாகவும் செயல்பட உள்ளது.இதனால் பொதுமக்கள் பல்வேறு பணிகளை அந்தந்த மண்டல அளவிலேயே முடித்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். இது தொடர்பான பரிந்துரைகள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஒப்புதலுக்கு சென்றுள்ளதாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.