சென்னை :''மதுரவாயல் - துறைமுக உயர்மட்ட சாலைக்கு, 5,600 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது,'' என, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு தெரிவித்தார். சென்னை துறைமுகம் தொகுதியில் வால்டாக்ஸ் சாலை, பெத்து தெரு, ரெட்ஹில்ஸ் சாலை, ரெட்டேரி சந்திப்பு பகுதிகளில் நடைபெறும் மழை வெள்ளம் தடுப்பு பணிகளை, அமைச்சர்கள் வேலு, சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து, அமைச்சர் வேலு அளித்த பேட்டி:சென்னையில், மாநகராட்சி, நீர் மேலாண்மை, நெடுஞ்சாலை துறை வாயிலாக பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெறும் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இப்பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன், நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை மேற்கொள்ளும் பணிகளை விரைந்து முடிக்க, புறநகர் பகுதியில் உள்ள அதிகாரிகள், பணியாளர்கள் சென்னை நகருக்குள் பணியமர்த்தப்பட்டு, பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.மதுரவாயல் - துறைமுகம் சாலை திட்டம் 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. ஏற்கனவே இருந்த அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என, மத்திய அரசு தெரிவித்தது. தற்போது முழு ஒத்துழைப்பு அளித்து வருவதால், மதுரவாயல் - துறைமுகம் சாலைக்கு ஒப்பம் கோரப்பட்டுள்ளது.இதற்காக 5,600 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. வரும் 2024ல், மதுரவாயல் உயர்மட்ட சாலை திறக்கும் வகையில் பணிகள் நடைபெற உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.