அவிநாசி: தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்கும் வியாபாரிகளின் வங்கிக்கணக்கை முடக்க போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட பொருட்கள், பெட்டிக்கடைகள், பேக்கரி, மளிகைக்கடைகள் என, பல இடங்களில் மறைமுகமாக விற்கப்படுகின்றன. போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுத்த முடிவதில்லை. அதேபோல், தடை செய்யப்பட்ட பாலித்தின் பைகளும் புழக்கத்தில் உள்ளன. வட மாநிலங்களில் இருந்து அவற்றை கொண்டு வந்து, பதுக்கி, கடைகளுக்கு வழங்கும் செயலில் பலரும் ஈடுபடுகின்றனர்.
இவற்றை கட்டுப்படுத்த, தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்கும் வியாபாரிகளின் வங்கிக்கணக்கை முடக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.போலீசார் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,'தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பாலித்தின் பைகளின் உற்பத்தி தடை செய்யப்படும் வரை அவற்றின் புழக்கம் கட்டுக்குள் வராது.
எனவே, அவற்றை விற்பனை செய்வோரின் வங்கிக்கணக்கை முடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டால் மட்டுமே, மீண்டும் இத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டார்கள். இந்நடவடிக்கைக்கு அரசு அனுமதி அளித்தால், தடை செய்யப்பட்ட பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் தடை செய்துவிட முடியும்' என்றனர்.