உடுமலை : மடத்துக்குளம் வட்டாரத்தில் செயல்படும், ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மடத்துக்குளம் தாலுகாவில், 11 ஊராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகள் உள்ளன. லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் இப்பகுதியில், அடிப்படை மருத்துவ தேவைகளை நிறைவு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மடத்துக்குளத்திலுள்ள அரசு மருத்துவமனையில், போதிய வசதிகள் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாத நிலையில், அடிப்படை மருத்துவ வசதிகள் கூட கிடைக்காமல், பொதுமக்கள் உடுமலை அரசு மருத்துவமனைக்கு வர வேண்டிய சூழல் உள்ளது.
எனவே, மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும், போதிய அளவு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும்.அதே போல், அரசு முதன்மை சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும் அடிப்படை வசதிகள் இல்லாமல், பொதுமக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர். அரியநாச்சிபாளையம், மடத்துக்குளம், குப்பம்பாளையம் பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்கள், வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால், பெரும் சிக்கல் ஏற்படுகிறது.இந்த துணை சுகாதார நிலையங்களுக்கு சொந்த இடம் தேர்வு செய்து, அங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்ட வேண்டும்.
மேலும், கடத்துார், காரத்தொழுவு, ஆர்ஜிபுதுார், துங்காவி, மைவாடி, கொழுமம், பாப்பான்குளம், நீலம்பூர், ருத்ராபாளையம், போத்தநாயக்கனூர், சாமராயப்பட்டி பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களை புதுப்பித்து, வசதிகளை மேம்படுத்த வேண்டும்.சோழமாதேவி, கிருஷ்ணாபுரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலையங்கள் சுற்றுச்சுவர் இல்லாமல், சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.
பாப்பான்குளம், துங்காவி பகுதிகளில் மருத்துவ அலுவலர் குடியிருப்பு அமைக்க வேண்டும். கணியூர் முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ வசதிகளை அதிகரிக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.