உடுமலை : ஒவ்வொரு ஆண்டும், 3,200 டன் அளவுக்கு பசுந்தீவன உற்பத்தி செய்து விற்க விருப்பமுள்ளவர், மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை தீவன பற்றாக்குறையை போக்க, பசுந்தீவன உற்பத்தி பெருக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.அரசு மானியத்துடன், ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டத்தில், தீவன தொழில் முனைவோர் என்ற திட்டம் இந்தாண்டு செயல்படுத்தப்படுகிறது.ஆண்டுக்கு, 3,200 டன் ஊறுகாய் புல் தயாரித்து, விவசாயிகளுக்கு விற்பனை செய்ய, 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 25 சதவீதம் அல்லது, 10.50 லட்சம் ரூபாய் மானியம் கிடைக்கும். மானியத்தொகை அல்லது பண்ணை கருவிகளான புல் அறுவடை கருவி, புல் நறுக்கும் கருவி, டிராக்டர் வழங்கப்படும்.
பால் உற்பத்தியாளர், பால் பண்ணை உரிமையாளர்கள், சுய உதவி குழு அல்லது ஊறுகாய் புல் தயார் செய்த, ஐந்து ஆண்டுகளுக்கு விற்க தயாராக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., - எஸ்.டி., வேலையில்லாத பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இதுகுறித்து திருப்பூர் கலெக்டர் வினீத் கூறுகையில், ''தகுதியான நபர்கள், அக்., 10ம் தேதிக்குள், அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி டாக்டரை அணுகி, திட்ட விளக்கம் பெற்று விண்ணப்பிக்கலாம். கலெக்டர் வாயிலாக இறுதி பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்படும்; அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்,'' என்றார்.