திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 30 நாட்களில் ரூ.36 லட்சம் மோசடி மூன்று மனைவியுடன் வசித்து வந்தவர் கைது | செங்கல்பட்டு செய்திகள் | Dinamalar
திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 30 நாட்களில் ரூ.36 லட்சம் மோசடி மூன்று மனைவியுடன் வசித்து வந்தவர் கைது
Added : அக் 06, 2022 | |
Advertisement
 
Latest district News

தாம்பரம்:திருமணம் செய்து கொள்வதாக, 'ஆன்-லைன்' மூலம் அணுகி, பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி, நுாதன முறையில், 36 லட்சம் ரூபாயை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். இவர், பலரிடம் மோசடியில் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது.தாம்பரத்தை அடுத்த முடிச்சூரை சேர்ந்த 35 -வயது பெண், திருமணமாகி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனியாக வசித்து வருகிறார்.'ஆன்லைன்'இதனால், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, வரன் பார்க்கும் 'ஆன்லைன்' தளத்தில் பதிவு செய்தார்.இவரது விபரங்களை பார்த்து, ஜூன் மாதம் ஒருவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டார். தனது பெயர், ஹபீப் ரஹ்மான், 38, என்றும், திருமணம் ஆகி மனைவி இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

சென்னையில் வேலை செய்து கொண்டு, தனியாக வசித்து வருவதாகவும் கூறிய அவர், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதை நம்பி, அப்பெண், திருமணத்தை பற்றி பேச நேரில் வருமாறு அழைத்துள்ளார். ஹபீப் ரஹ்மான், விலையுயர்ந்த சொகுசு காரில் வந்துள்ளார். அப்போது, தன் சகோதரர் கனடாவிலும், சகோதரி புரூனேயிலும் வசித்து வருவதாக கூறியுள்ளார். ஹபீப் ரஹ்மானின், நடவடிக்கைகளை பார்த்து, திருமணம் செய்துகொள்ள அப்பெண் முடிவு செய்துள்ளார்.

தன் சகோதரி ஜூலை மாதம் சென்னை திரும்பிய பின், திருமணம் வைத்துக் கொள்ளலாம் என, ஹபீப் ரஹ்மான் கூறியுள்ளார். தாம்பரத்தை அடுத்துள்ள கிஷ்கிந்தா அருகே, தனக்கு ஏக்கர் கணக்கில் நிலம் இருப்பதாகவும், அந்த நிலம் தொடர்பான வழக்கை முடிக்க, 10 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறிய ஹபீப் ரஹ்மான், நிலம் கைக்கு வந்தவுடன் விற்பனை செய்து, செட்டில் ஆகிவிடலாம் என கூறியுள்ளார்.இதை நம்பி, அந்த பெண்ணும் 10 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். இதேபோல், சிறுக சிறுக, 30 நாட்களில் 36 லட்சம் ரூபாய், 13 சவரன் நகைகளை ஏமாற்றி வாங்கிக்கொண்டு தலைமறைவாகி விட்டார்.
ஆசைவார்த்தைஇதையடுத்து, அப்பெண், பீர்க்கன்காரணை போலீசில் புகார் கொடுத்தார். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, பூந்தமல்லியில் இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்த ஹபீப் ரஹ்மானை, நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், அவரது சொந்த ஊர் பெரம்பலுார் மாவட்டம் என்பதும், அவருக்கு ஏற்கனவே மூன்று திருமணமாகி, மனைவிகளுடன் வசித்து வருவதும் தெரிய வந்தது.

மேலும், அவரது உண்மையான வயது, 54 என்பதும் தெரிய வந்தது. இவர், பெண்ணை ஏமாற்றி வாங்கிய, 36 லட்சம் ரூபாயை செலவு செய்துவிட்டதாக கூறியுள்ளார். கணவரால் கைவிடப் பட்ட, கணவரை இழந்தவர்களை குறிவைத்து, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, நுாதன முறையில், பணம், நகைகளை ஏமாற்றி வந்துள்ளார்.

இதேபோல், திருமணம் செய்துகொள்ளுதல், வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புதல், ரியல் எஸ்டேட் ஆகிய பெயர்களில், பலரிடம் மோசடி செய்து கோவா, கேரளா என, உல்லாசமாக சுற்றி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, ஹபீப் ரஹ்மானை கைது செய்த போலீசார், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X