திருப்பூர் : தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மார்க்கெட் வளாகத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் பெரும் அவதி நிலவுகிறது.
திருப்பூர் தினசரி மார்க்கெட், பூ மார்க்கெட் ஆகியன, தற்போது 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் புனரமைப்பு செய்யப்பட்டு புதிய வளாகம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.இரு வளாகங்களிலும் செயல்பட்ட கடைகள் தற்காலிகமாக பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் வளாகத்தில் இயங்கி வருகின்றன. இங்கு ஏறத்தாழ 200 கடைகள் செயல்படுகின்றன. தினமும் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் பொருள் வாங்க வந்து செல்கின்றனர்.
கடந்த சில நாட்களாக சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு வழக்கத்தை விட இரு மடங்கு வாடிக்கையாளர் கூட்டம் மார்க்கெட் வளாகத்தில் காணப்பட்டது.உரிய வடிகால் வசதியில்லாத நிலை உள்ளது. லேசான மழை பெய்தால் கூட ஆங்காங்கே தாழ்வாக உள்ள இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது.கடைகளில் பொருள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
கையில் மூட்டை முடிச்சுகளுடன் வருவோர் மழை நீர் தேங்கி நிற்கும் இடங்களைக் கடந்து செல்லும் போது அவதியுறுகின்றனர்.வாகனங்களில் செல்வோர் நீர் தேங்கி நிற்கும் இடத்தின் நிலை குறித்து அறியாமல் கடந்து செல்லும் போது, வழுக்கி விழும் சம்பவங்களும் நேர்கிறது.மார்க்கெட் வளாகத்தில் மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.