பல்லடம் : வெண்டைக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருவது, பல்லடம் வட்டார விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
பல்லடம் வட்டாரத்தில், தென்னை, வாழை, சோளம் மட்டுமன்றி, பல்வேறு வகையான காய்கறி பயிர்களும் பயிரிடப்படுகின்றன. விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், பயிர்களை திருப்பூர், பல்லடம் பகுதி உழவர் சந்தைகள் மூலம் விற்பனை செய்கின்றனர். வெண்டைக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.பல்லடம் - கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விவசாயி கார்த்திகேயன் கூறியதாவது:
அரை ஏக்கரில் வெண்டை பயிரிட்டுள்ளோம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்கள் அறுவடைக்கு வரும். ஏறத்தாழ பத்து பைகள் வரை கிடைக்கும். 16 கிலோ கொண்ட பை ஒன்று 500 முதல் 600 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. வெங்காயம், தக்காளி உள்ளிட்டவற்றை பயிரிட்டு ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீண்டு, தற்போது வெண்டை நல்ல விலைக்கு விற்று வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது.