திருப்பூர் : திருப்பூர் அருகே எரிசாராயம் கடத்திய விவகாரத்தில், மேலும், நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள, இருவரையும் தேடி வருகின்றனர்.
ஊத்துக்குளி, முத்தம் பாளையம் கிராமம், முண்டூர், காவலை தோட்டத்தில் எரி சாராயத்தை பதுக்கி வைத்து, வெளி மாவட்டத்துக்கு கடத்துவது குறித்து போலீசாருக்கு தெரியவந்தது. இது குறித்து, கடந்த செப்., 22ல் தாராபுரம் மதுவிலக்கு தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அதில், 'சானிடைசர்' என்ற பெயரில், எரிசாராயத்தை ஊத்துக்குளிக்கு கடத்தி வந்து, பின், சிறிய கேன்களில் மாற்றி, வெளி மாவட்டத்துக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, சென்னையை சேர்ந்த விஜய், 25, சதீஷ், 28, ஜெயராஜ், 28, சுலைமான், 26, மனோஜ், 32; தர்மபுரியை சேர்ந்த விக்னேஷ், 26; திருப்பூர், கருமாரம்பாளையத்தை சேர்ந்த குணசேகரன், 29 ஆகிய, ஏழு பேரை கைது செய்து, 1,750 லி., எரிசாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய தலா, இரு வேன், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தனிப்படை விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடைய திருவண்ணாமலையை சேர்ந்த பரணி, 34, அவரது தம்பி சேலத்தை சேர்ந்த முருகன், 33, திருவள்ளூரை சேர்ந்த சங்கர், 27, ராணி, 48 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.இருவருக்கு வலைபோலீசார் கூறுகையில், ''எரிசாராயம் கடத்தல் விவகாரத்தில், இதுவரை, பெண் உட்பட, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள, அப்பு, பார்த்திபன் ஆகியோரை தேடி வருகிறோம். தற்போது கைது செய்யப்பட்ட, நான்கு பேரும், சிறிய கேன்களில் எரிசாராயம் மற்றும் தண்ணீர் கலக்கப்பட்டு, அதை மதுவாக சேலம், திருவண்ணாமலை பகுதியில் விற்று வந்தனர்.
கடந்த, இரு மாதமாக, ஊத்துக்குளியில் 'சானிடைசர்' என்ற பெயரில், எரிசாராயத்தை கடத்தி வந்தனர். இதற்கான, 'பில்கள்' அனைத்தும் பார்த்திபன் பெயரில் உள்ளது. கோவாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கும் ஒரு தனிப்படையினர் சென்று விசாரணை நடத்துகின்றனர். இருவர் பிடிபடும் பட்சத்தில், முழுமையான விபரம் தெரியும்'' என்றனர்.