திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு ராபி பயிர்களுக்கு பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த, எச்.டி.எப்.சி., ஏர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
ராபி பருவத்தில் நெல், மக்காச்சோளம், பாசிப்பயிறு, கொண்டை கடலை, நிலக்கடலை, சோளம், பருத்திக்கு விவசாயிகள் காப்பீடு கட்டணம் செலுத்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ராபி பருவத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக, பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம், கடன் பெறாத விவசாயிகள், நடப்பு ஆண்டுக்கான அடங்கலை வி.ஏ.ஓ., விடம் பெற்று, வங்கி பாஸ்புக் முதல் பக்க நகல், ஆதார் அட்டை ஆகியவற்றை இணைத்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சென்று பதிவு செய்துகொள்ளலாம்.
காப்பீடு தொகை எவ்வளவு?
திருப்பூர் மாவட்டத்தில் நெல் ஏக்கருக்கு 559.50 ரூபாய்; பாசிப்பயிறு ரூ.253.94 செலுத்தி, வரும் நவ., 15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளவேண்டும். மக்காச்சோளம் ஏக்கருக்கு 486.75 ரூபாய்; கொண்டை கடலைக்கு 269.25 ரூபாய்; பருத்தி ஏக்கருக்கு 693.60 ரூபாய் பிரிமியம் தொகையை, நவ., 30ம் தேதிக்குள் செலுத்தவேண்டும்.
சோளம் ஏக்கருக்கு 38.61 ரூபாய் காப்பீடு தொகையை டிசம்பர் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்; நிலக்கடலைக்கு 470.25 ரூபாயை டிச., 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.பயிர் காப்பீடு விவரங்களை உழவன் செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம். இயற்கை சீற்றங்கள் ஏற்படும் முன் இந்த திட்டத்தில் தங்கள் பயிர்களை காப்பீடு செய்து கொள்ளவேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குனர், வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர்களை தொடர்புகொள்ளலாம்.