திருப்பூர் : ஆயுத பூஜையைத் தொடர்ந்து நகரில் சேகரமாகும் குப்பை கழிவுகள் தேங்காத வகையில், ஒரே நாளில் ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை இரவோடு இரவாக அகற்றப்பட்டது.
ஆயுத பூஜையை யொட்டி வாழை மரக்கன்றுகள், கரும்பு, பூ, மாலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக காணப்பட்டது. வழக்கமாக, இந்த விற்பனை முடிந்த பின் நகர வீதிகளில் பெருமளவு விற்பனையாகாமல் மீதமான வாழைக்கன்றுகள், மாவிலைகள் உள்ளிட்டவை பெருமளவு கழிவுகளாக சேர்ந்து குவியல் குவியலாக கிடக்கும். இது வாரக்கணக்கில் அகற்றப்படாமல் தேங்கி அவதியை ஏற்படுத்தும்.
இதற்கு தீர்வு காணும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் முன்கூட்டியே இதற்கான திட்டமிடலை மேற்கொண்டது. மாநகராட்சி பகுதி முழுவதும் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்கள், இவற்றில் ஈடுபடும் வாகனங்கள் தவிர கூடுதல் பணியாளர்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை இந்த குப்பை கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மேயர் தினேஷ்குமார், கமிஷனர் கிராந்தி குமார் நேரடியாக இப்பணியை பார்வையிட்டனர்.நேற்று முன்தினம் இரவு வரை ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு மேற்பட்ட குப்பை அகற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். குப்பைகள் கிடந்ததற்கான அடையாளமே இல்லாத வகையில் நேற்று காலை நகரின் முக்கிய ரோடுகள் காணப்பட்டன.