திருப்பரங்குன்றம்--திருப்பரங்குன்றத்தில் நவராத்திரி விழாவையொட்டி முருகப்பெருமான் அம்பு எய்திய நிகழ்ச்சி நேற்று நடந்தது.கோயில் நவராத்திரி விழாவில் கோவர்த்தனாம்பிகை அம்பாள், தினமும் ஒரு கொலு அலங்காரத்தில்அருள்பாலித்தார். உச்ச நிகழ்ச்சியாக நேற்று மாலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வெள்ளி வில், அம்புடன்தங்கக் குதிரை வாகனத்தில் பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளினர். சுவாமி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜை நடந்தது.அங்குள்ள வன்னி மரத்தடியில் வில் அம்பு வைக்கப்பட்டு சந்தனம், மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவிய அபிஷேகங்கள், விக்னேஸ்வர பூஜை, வர்ண பூஜை, எட்டு திக்குகளிலும் பலி பூஜை முடிந்து சுவாமியின் பிரதிநிதியான சிவாச்சாரியாரிடம் வில்அம்பு வழங்கப்பட்டது.அவர் நான்கு திசைகளிலும் அம்பு எய்தார். தீபாராதனை முடிந்து பக்தர்களின் திருக்கண் மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளினார்.
மேலுார்
கஸ்துாரிபாய் நகரில் மகிஷாசூரனை வதம் செய்வதற்காக அம்பு எய்யும் விழா நடந்தது. நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான விஜயதசமி நாளில், மேலுார் சிவன் கோயிலில் இருந்து காமாட்சி அம்பாள் குதிரை வாகனத்தில் சென்றார். சிவாச்சாரியார் தட்சிணா மூர்த்தி, நிர்வாக அதிகாரி வாணி மகேஷ்வரி முன்னிலையில் மகிஷாசூரனை வதம் செய்தார்.