ரூ.25 லட்சம் மதிப்பு
துணி பேல்கள் திருட்டு
பெருந்துறை, அக். 6-
ஈரோடு, பார்க் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 46; தனியார் டெக்ஸ்டைல் மேலாளர். இவருடைய கம்பெனியின் தலைமை அலுவலகம், குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ளது. இந்த கம்
பெனிக்கு சொந்தமான குடோன் ஒன்று, பெருந்துறை அடுத்த, கருமாண்டி
செல்லிபாளையத்தில் உள்ளது.
இந்த கம்பெனியின் பொறுப்பாளராக உள்ள ரமேஷ் என்பவர், கடந்த மாதம், 30ல் குடோனை திறந்து பார்த்தபோது, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 52 துணி பேல்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, சுரேஷ்குமார் பெருந்துறை போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மூதாட்டியிடம்
செயின் பறிப்பு
ஈரோடு, அக். 6-
ஈரோடு திண்டல் அடுத்த, வித்யா நகரை சேர்ந்தவர் ராமசாமி; இவரது மனைவி மரகதவல்லி, 62; இவர் கடந்த, 4ல், அதே பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த, 25 வயது மதிக்கத்தக்க, 2 வாலிபர்கள், மரகதவல்லி கழுத்தில் அணிந்திருந்த, 2.2 பவுன் நகையை பறிக்க முயன்றார்.
சுதாரித்த மூதாட்டி, செயினை இறுக்க
மாக பிடித்துக் கொண்டார். ஆனாலும், ஆசாமிகள் கழுத்திலிருந்த மற்றொரு,
1.2 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து, மூதாட்டி கொடுத்த புகார்படி, ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
குடிப்பழக்கத்தால் தகராறு
இளம்பெண் விபரீத முடிவு
ஈரோடு, அக். 6-
ஈரோடு, ரயில்வே காலனி குடி
யிருப்பை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன், 25; ஈரோடு ரயில்வே யார்டு மாஸ்டர் அலுவலக எழுத்தர். இவரது மனைவி திவ்யா, 24; கடந்த, 2 ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. நவநீதகிருஷ்ணனுக்கு குடிப்
பழக்கம் இருந்துள்ளது.
இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த, 3ல், வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. 4ம் தேதி காலை, நவநீதகிருஷ்ணன் வெளியே சென்று விட்டு, மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, திவ்யா சேலையில் துாக்கிட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி, 2 ஆண்டுகளே ஆனதால், ஆர்.டி.ஓ., விசாரிக்கின்றனர்.
மதுவிற்ற 2 பேர் கைது
கோபி, அக். 6-
கோபி அருகே, வெள்ளாங்கோவில் பகுதியில், சிறுவலுார் போலீசார், நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார், 50, ஈரோட்டை சேர்ந்த இளங்கோ, 36, ஆகிய இருவரும், கூடுதல் விலைக்கு விற்பதற்காக, மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த
தாக கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்த, 17 ஆயிரம் ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிகிச்சையிலிருந்தவர் பலி
போலீசார் விசாரணை
பவானி, அக். 6-
பவானி அடுத்த, ஆர்.என்.புதுார் பகுதியில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன், கதிர்வேல், 53, என்பவர் மயங்கி கிடந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கதிர்வேல், நேற்று, இறந்தார். மேலும், இறந்தவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என, சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
துப்புரவு ஆபீசில்
விஜயதசமி விழா
கோபி, அக். 6-
கோபி நகராட்சி, துப்புரவு மேற்பார்வையாளர் அலுவலகத்தில், விஜயதசமி விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விஜயதசமியை முன்னிட்டு, கோபி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள துப்புரவு மேற்பார்வையாளர் அலுவலகத்தில், நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது, நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள், துப்புரவு பணியாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள் என, பலர் பங்கேற்றனர். இதேபோல், மொடச்சூர் சந்தை வளாகத்தில் உள்ள துப்புரவு மேற்பார்வையாளர் அலுவலகத்தில் சிறப்பு பூஜைகள்
செய்து வழிபட்டனர்.
எலந்தகுட்டையில்
அதிகபட்ச மழை
ஈரோடு, அக். 6-
எலந்தகுட்டை மேட்டில், நேற்று முன்தினம், அதிகபட்சமாக, 12.60 மி.மீ., மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீ): கோபி, 1, தாளவாடி, 12, சத்தி, 6, பவானிசாகர், 10.20, கொடுமுடி, 5, சென்னிமலை, 7, கவுந்தப்பாடி, 3.4, கொடிவேரி, 7.20, வரட்டுபள்ளம், 3.60 என மொத்தம், 68 மி.மீ., மழையளவு பதிவானது. ஈரோடு மாநகரில் மழை பெய்யவில்லை. மாறாக சிறிது நேரம் குளிர்ந்த காற்று வீசியது.
புகையிலை விற்ற
கடைக்காரர் கைது
ஈரோடு, அக். 6-
ஈரோட்டில், புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு, திண்டல் காரபாறையை சேர்ந்த ராஜாசிங் மகன் பட்ராஜ், 38; இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இங்கு விற்பனை செய்வதற்காக, புகையிலை பொருட்களை வைத்திருந்தார். இதையறிந்த ஈரோடு தாலுகா போலீசார், புகையிலை பொருட்களை கைப்பற்றி, பட்ராஜை கைது செய்தனர்.
லாட்டரி விற்ற
டீ ஸ்டாலுக்கு 'சீல்'
ஈரோடு, அக். 6-
ஈரோடு, கே.என்.கே.,ரோடு, கண்ணையன் வீதியை சேர்ந்தவர் ரவி, 57; இவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை, ஈரோடு, மூலப்பட்டறை பகுதியில் உள்ள டீ ஸ்டாலில், கடந்த 3ல் விற்று கொண்டிருந்தார்.
அவரை, ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார், கைது செய்தனர். இவர் மீது லாட்டரி சீட்டு விற்றதாக கருங்கல்பாளையத்தில், 3, வீரப்பன்சத்திரத்தில், 1 வழக்கு நிலுவையில் உள்ளது. தொடர்ந்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், டீ ஸ்டாலுக்கு, நேற்று காலை ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி, வருவாய் துறையினர், 'சீல்' வைத்தார். கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர்
ராஜதுரை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெண் போலீசால் பரபரப்பு
ஈரோடு, அக். 6-
ஈரோடு ஆனைக்கல்
பாளையம் ஆயுதப்படையில் பணியாற்றி வருபவர் தாமரைசெல்வி, 23; இவர் கடந்த, 3 நாட்களுக்கு முன் குடும்ப
பிரச்னையால், கொசு மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர், தாமரை செல்வியை மீட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 2 நாட்கள் சிகிச்சை பெற்று, பணிக்கு நேற்று முன்தினம் திரும்பினார். இதனால்,
பரபரப்பு ஏற்பட்டது.
வனத்தில் வேட்டையாட
முயன்ற 3 பேருக்கு காப்பு
புன்செய்புளியம்பட்டி, அக். 6-
பவானிசாகர் வனப்பகுதியில், சுருக்கு கம்பி பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் சுற்றித்திரி
வதாக, பவானிசாகர் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவுப்படி, வனத்துறையினர், பண்ணாரி காவல் சுற்று வனப்பகுதியில்
ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கொத்தமங்கலம் பிரிவு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த, 3 பேரை பிடித்து விசாரித்ததில், வடவள்ளியை சேர்ந்த வெள்ளையன், 62, ரங்கசாமி, 52, முருகேஷ், 32, ஆகியோர் வனவிலங்குகளை வேட்டையாட, சுருக்கு கம்பியுடன் வந்தது தெரிந்தது. மூவரையும் கைது செய்து, சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்
படுத்தி, சத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
வியாபாரம் இல்லாததால்
சாலையோரம் கிடந்த வாழைகள்
ஈரோடு, அக். 6-
ஈரோட்டில் விற்பனையாகாத வாழை கன்றுகளை, சாலையிலேயே வியாபாரிகள் விட்டு சென்றனர்.
சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கடந்த, 4ல் கொண்டாடப்பட்டது. இதற்காக ஈரோடு மற்றும் அதன் சுற்று பகுதிகளிலிருந்து, விவசாயிகள் வாழை கன்றுகளை வெட்டி எடுத்துவந்து, விற்பனைக்கு கொண்டு வந்தனர். விலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வாழை கன்றுகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்தன. மேலும், கிடைத்த விலைக்கு வாழை கன்றுகளை விற்கவும் செய்தனர். ஒரு கட்டத்தில் வாழை கன்று விலையை விட, விற்பனைக்காக அமர்ந்திருக்கும் நபருக்கான செலவு அதிகரித்தது. இதையடுத்து விற்காத வாழை கன்று
களை, சாலையோரங்களிலேயே
வியாபாரிகள் விட்டு சென்றனர்.
கொங்கலம்மன் கோவிலில்
மகா ஹோமம்: திரண்ட பக்தர்கள்
ஈரோடு, அக். 6-
ஈரோடு கொங்கலம்மன் கோவிலில், 33ம் ஆண்டு நவராத்திரி நிறைவு விழா, நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு தொடங்கிய மகா ஹோம பூஜை, மதியம், 12:30 மணிக்கு நிறைவடைந்தது. தொடர்ந்து, கலச ஆவாகணம், புண்ணியாக
வசனம் ஹோமம், பூர்ணாகுதி, கலசம் புறப்பாடு, அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பின், கோவிலில் திரண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஹோமத்திற்கு தேவையான திரவியம், குச்சி, நெய், பால், இளநீர் உள்ளிட்ட
பொருட்களை பக்தர்கள்
வழங்கினர்.
ரூ.66 ஆயிரத்துக்கு
தேங்காய் வர்த்தகம்
மொடக்குறிச்சி, அக். 6-
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலம் நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 6,926 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ அதிகபட்சம், 22.65; குறைந்தபட்சம், 20.40; சராசரி, 22.39 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 1,497 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 32 ஆயிரத்து, 181 ரூபாய்க்கு விற்றது.
அதேபோல், 29 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, அதிகபட்சம், 72.16; குறைந்தபட்சம், 68.87; சராசரி, 71.68 ரூபாய். 2ம் தரம், அதிகபட்சம், 66.10; குறைந்தபட்சம், 45.90; சராசரி, 55.10 ரூபாய்க்கு ஏலம் போனது.
மொத்தம், 514 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு, 34 ஆயிரத்து, 237 ரூபாய்க்கு விற்பனை
யானது. மொத்தமாக தேங்காய், தேங்காய் பருப்பு சேர்த்து, 66 ஆயிரத்து, 418 ரூபாய்க்கு வர்த்தகமானது.
பெருந்துறை சாகர் பள்ளியில்
விஜயதசமி மாணவர் சேர்க்கை
பெருந்துறை, அக். ௬-
விஜயதசமியை முன்னிட்டு, பெருந்துறை சாகர் இண்டர்நேஷனல் பள்ளியில், பிரீ.கே.ஜி., குழந்தைகள் சேர்க்கை, நேற்று நடந்தது. பள்ளி முதல்வர் ஷீஜா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
மழலையர் நெல்மணியில் தமிழின் உயிர் எழுத்தான, 'அ' வை எழுதி தங்கள் கல்வி பயணத்தை துவக்கினர். குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், தாளாளர் சவுந்திரராசன், துணை தலைவர் ஆறுமுகம், பொருளாளர் பழனி
சாமி, இணை செயலாளர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர்.
மரத்தில் பைக் மோதி
ஒருவர் உயிரிழப்பு
கோபி, அக். 6-
நம்பியூர் அருகே, தண்ணீர் பந்தல்
பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினக்குமார், 30; கூலித்தொழிலாளி. இவர், கோபி-குன்னத்துார் சாலையில், பூச்சநாயக்கன்பாளையம் பிரிவு அருகே, நேற்று காலை, 10:15 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் இருந்த புளிய
மரத்தில் பைக் மோதி ரத்தினக்குமார் பலத்த காயமடைந்தார்.
அருகிலிருந்தவர்கள், ரத்தினக்குமாரை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, அவர் நேற்று இறந்தார். இதுகுறித்து ரத்தினக்குமாரின் தந்தை பொன்னுசாமி, 64, கொடுத்த புகார்படி, நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
துாய்மை பணியாளர்கள் பி.டி.ஓ.,விடம் மனு
சத்தியமங்கலம், அக். 6-
தாளவாடி ஊராட்சி
யில் நடந்த கிராம சபை கூட்டத்தில், ஜாதிபெயரை சொல்லி இழிவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பி.டி.ஓ., மற்றும் போலீஸ் ஸ்டேஷனில் துாய்மை பணியாளர்கள் புகார் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி ஊராட்சியில் கடந்த, 2ல், கிராம சபை கூட்டம் நடந்தது. அதில் பொதுமக்கள் கேட்ட கேள்விக்கு ஊராட்சி மன்ற தலைவர் திராட்சாயினி சரியாக பதில் அளிக்கவில்லை. பொதுமக்களின் குறைகளை கேட்காமல் கூட்டம் முடிந்ததாக அறிவித்தார். இதனால் பொதுமக்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு பொதுமக்களுடன் வாக்கு
வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கேள்வி எழுப்பிய துாய்மை பணியாளர்களை, ஜாதி பெயரை கூறி இழிவாக பேசியதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தாளவாடி வட்டாரத்தில் உள்ள துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால், தாளவாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விஜயதசமியையொட்டி
பாரியூரில் வாகனங்களுக்கு பூஜை
கோபி, அக். 6-
விஜயதசமியை முன்னிட்டு, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், பக்தர்கள் தங்களின் பஸ் மற்றும் லாரிகளுக்கு, நேற்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
தமிழகம் முழுவதும், நேற்று முன்தினம், ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்பட்டது. அதன்படி, ஈரோடு மாவட்டம், கோபியில் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், நேற்று முன்தினம், கோபி பகுதி விவ
சாயிகள் வேளாண் இயந்திரங்களுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
அதையடுத்து, விஜயதசமியை முன்னிட்டு, நேற்று காலை முதல், பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர். பைக், கார், ஆட்டோக்கள், தனியார் பஸ் மற்றும் லாரி போன்ற வாகனங்களை, கோவில் ராஜகோபுரம் அருகே நிறுத்தி, பூஜை செய்தும், திருஷ்டி பூசணிக்காய் உடைத்தும், வழிபட்டு சென்றனர். இதனால், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், நேற்று, பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பைக்- மொபட் மோதி
கூலித்தொழிலாளி சாவு
கோபி, அக். 6-
கவுந்தப்பாடி அருகே, பைக்- மொபட் மோதிய விபத்தில், கூலித்தொழிலாளி பலியானார்.
பெருந்துறை அருகே, பாண்டியம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 48; கூலித்தொழிலாளி; இவர், 'டி.வி.எஸ்., எக்சல்' மொபட்டில், காஞ்சிக்கோவில் சாலையில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கவுந்தப்பாடியை சேர்ந்த தங்கராசு, 21, என்பவரின், 'யமஹா' பைக்கும், சுப்பிர
மணியத்தின் மொபட்டும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த இருவரும், சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, சுப்பிரமணி இறந்தார். கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
கஸ்துாரி அரங்கநாதர்
கோவிலில் தேரோட்டம்
ஈரோடு, அக். 6-
ஈரோடு கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் தேரோட்ட விழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
ஈரோடு கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் தேர் திருவிழா புரட்டாசி மாதம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான தேர் திருவிழா கடந்த, 28ல், கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, யாகசாலை பூஜை, திருமஞ்சனம், காலை, 9:15 மணிக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கஸ்துாரி அரங்கநாதர் எழுந்தருள, 'கோவிந்தா, கோவிந்தா' என, பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி, தேரை இழுத்து சென்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு, பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, வாகனங்களுக்கு பாதை மாற்றி விடப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. வரும் 8 காலை, யாகசாலை பூஜை, திருமஞ்சனம், மாலை வாகன புறப்பாடும் நடக்க உள்ளது.