கரூர், ஐந்து ரோடு அருகே, சாலை நடுவில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கரூர், ராஜாஜி சாலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், திடீரென பள்ளம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, அண்ணா வளைவு, ரத்தினம் சாலை, கோவை சாலை, வெங்கமேடு ரயில்வே பாலம் ஆகிய இடங்களிலும் அடுத்தடுத்து திடீரென பள்ளம் ஏற்பட்டது.
பாதாள சாக்கடைக்காக, போடப்பட்ட குழாய்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாக, சாலையில் பள்ளம் ஏற்படுவதாக, கரூர் மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், சாலையில் பள்ளம் ஏற்படுவதும், அதை, மாநகராட்சி நிர்வாகத்தினர் சரி செய்து, மீண்டும் தார் சாலை அமைப்பதும் தொடர்ந்து வருகிறது.
கடந்த மாதம், பழைய நீதிமன்றம் முன், பள்ளம் ஏற்பட்டது. அதை சரி செய்யும் பணி, சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், கரூர் ஐந்து ரோடு பிரிவு, கோடீஸ்வரர் கோவில் முன், பள்ளம் ஏற்பட்டது. இதனால், அந்த இடத்தில், வாகனங்கள் ஒதுங்கி செல்லும் வகையில் பேரி கார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
கரூர், கருப்பாயி கோவில் தெருவில், சரிந்த பாதாள சாக்கடை மூடி சரி செய்யப்படாத நிலையில், கோடீஸ்வரர் கோவில் முன் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.