தேன்கனிக்கோட்டை அருகே, மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்த காப்பர் கம்பிகளை மர்ம கும்பல் திருடி சென்றதால், ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் பாதித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலாளம் பஞ்.,ல், சாமை ஏரி, கொடகரை பிரிவு சாலை, தட்டக்கரை பிரிவு சாலையிலுள்ள பஸ் ஸ்டாப் அருகே என, மூன்று இடத்தில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீரேற்றும் நிலையம் உள்ளது.
இதில், தட்டக்கரை நீரேற்று நிலையம் மூலம், கோட்டையூர் கொல்லை, பெட்டமுகிலாளம் உட்பட, 36 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நடக்கிறது. நேற்று அதிகாலை நீரேற்று நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், மின்தடையை ஏற்படுத்தி டிரான்ஸ்பார்மரை கீழே தள்ளி, அதிலிருந்த ஆயில் மற்றும் காப்பர் கம்பிகளை திருடிச்சென்றனர்.
இதன் மதிப்பு, 1.50 லட்சம் ரூபாய். இதனால், மின்மோட்டார்களை இயக்க முடியாமல், ஒகேனக்கல் குடிநீரை தொட்டிகளுக்கு ஏற்ற முடியவில்லை. அதனால், 36 கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் பாதித்துள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து, தண்ணீர் வினியோகம் செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.