மார்பக புற்று நோயை கண்டறிய சுய பரிசோதனையே முதல் படி | மதுரை செய்திகள் | Dinamalar
மார்பக புற்று நோயை கண்டறிய சுய பரிசோதனையே முதல் படி
Added : அக் 06, 2022 | |
Advertisement
 

மதுரை: மாதவிடாய் முடிந்த ஒருவாரத்தில் மார்பக சுயபரிசோதனை செய்வதன் மூலமே புற்றுநோயின் ஆரம்பநிலையை கண்டறியலாம் என சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை மார்பக புற்றுநோய்அறுவை சிகிச்சை நிபுணர் வேதா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:இந்தியாவில் 25 பெண்களில் ஒருவர் வீதம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டாலும் 60 முதல் 70 சதவீதம் பேர் நோய் முற்றிய 3ம், 4ம் நிலையில் சிகிச்சைக்கு வருகின்றனர். இதனால் சிகிச்சை பலனளிக்காமல் போவதற்கு வாய்ப்பு அதிகம். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தும் விகிதமும் அதிகமாகும்.

அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஹார்மோன் சுரப்பு மாற்றத்தில் ஏற்படுவதே மார்பக புற்றுநோய். கருத்தடை மாத்திரை சாப்பிடுபவர்கள், ஹார்மோன் மாற்று தெரபியை பல ஆண்டுகளாக எடுப்பவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கும். 35 வயதுக்கு மேல் முதல் குழந்தைப்பேறு அல்லது குழந்தையின்மை இரண்டுமே இதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.

குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டோருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலோ, சினை முட்டையில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலோ, மரபணுக்கள் பாதிப்படைந்தாலோ பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம்.மாதந்தோறும் மாதவிடாய் முடிந்த ஒருவாரத்தில் மார்பக சுயபரிசோதனை செய்வது அவசியம். இதன் மூலம் புற்றுநோய்க்கு முந்திய நிலையில் கண்டுபிடிக்கலாம். வலியில்லா கட்டி, மார்பு காம்பிலிருந்து நீர்வடிதல், சரும மாற்றம், வீக்கம், ஆரஞ்சு பழத்தோல் போன்ற தோற்றம் போன்றவை புற்றுநோயின் அறிகுறிகள்.

மார்பகத்தில் மாற்றம், அறிகுறி தென்பட்டால் புற்றுநோய் டாக்டரை அணுக வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் 'மேமோகிராம்' பரிசோதனை செய்வது நல்லது. உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு உட்கொள்வதால் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறையும்.மார்பகத்தில் புற்றுநோய் உருவானால் முழு மார்பகத்தையும் அகற்ற வேண்டியதில்லை. கன்சர்வேஷன், சென்டினல் லிம்ப் நோடு பயாப்சி, ஆங்ளோபிளாஸ்டி' போன்ற நவீன அறுவை சிகிச்சைகள் தற்போது நடைமுறையில் உள்ளன.

கீமோதெரபி மட்டுமின்றி 'டார்கெடிட் தெரபி, இம்யூனோதெரபி' போன்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.கதிர்வீச்சு பிரிவிலும் 3டி சி.ஆர்.டி., ஐ.எம்.ஆர்.டி., ஐ.ஜி.ஆர்.டி' போன்ற பல நுாதன சிகிச்சை முறைகள் உள்ளன. இடதுபக்க புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க 'ரெஸ்பிரேட்டரி கேடிங்' முறை உதவுகிறது. மிக துல்லிய கதீர்வீச்சான 'ப்ரோடான் தெரபி' பயன்படுத்தப்படுகிறது. எனவே ஆரம்பத்திலேயே சுயபரிசோதனை செய்தும், மேமோகிராம் பரிசோதனை செய்தும் புற்றுநோயை கண்டறிந்து வெல்லலாம் என்றார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X