திருச்சி:திருச்சியில், சட்ட விரோதமாக காப்பகத்தில் சிறுமியரை தங்க வைத்து, பாலியல் கொடுமை செய்த காப்பக நிர்வாகி மீது, 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை சாலையில் உள்ள குண்டூர் பகுதியில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 'அன்பாலயம்' என்ற மனநல காப்பகம் செயல்படுகிறது.காப்பகத்தை செந்தில்குமார், 56, நிர்வகித்து வருகிறார். அங்கு, சட்ட விரோதமாக, 18 வயதுக்கு குறைந்த பெண் குழந்தைகளை தங்க வைத்திருப்பதாகவும், சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் மற்றும் 'சைல்ட் லைன்' அமைப்பினர், காப்பகத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர்.அப்போது, புதுக்கோட்டையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வரும், 16 வயது, 15 வயது சிறுமியர்; சி.பி.எஸ்.இ., பள்ளியில் படிக்கும், 7 வயது சிறுமியையும் சட்ட விரோதமாக இங்கு தங்க வைத்திருப்பது தெரிந்தது.
குழந்தைகள் நலக் குழும அலுவலர்கள் அந்த சிறுமியரை மீட்டு விசாரித்த போது, அதில், 16 வயது சிறுமி காப்பகத்தில், பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, குழந்தைகள் நலக் குழுமத்தினர் கொடுத்த புகார்படி, திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார், காப்பக நிர்வாகி செந்தில் குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.