மதுரை : எதையும் எதிர்பார்க்காது செய்யப்படுவதே தானம் என சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசினார்.
மதுரை காஞ்சிமடத்தில்ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மாதாந்திர நட்சத்திர விழா நடந்தது. விழாவில் இணையதளம் வாயிலாக யட்ச பிரச்னம்என்ற தலைப்பில் சுவாமி சிவயோகானந்தா பேசியது:மனிதனின் விதியை உருவாக்க கூடியது எது என்னும் யட்சனின் கேள்விக்கு தானமே மனிதனின் விதியை உருவாக்குகிறது, என பதில் அளித்தார் யுதிஷ்டிரர்.
எல்லா உயிர்களுக்கும்நன்மை பயக்கும் காரியங்களைச் செய்வதே தானமாகும். அது விளம்பரமின்றி, எவரிடத்தும் எதையும் எதிர்பார்க்காது,அவரவர் சக்திக்குத் தகுந்தவாறு செய்யப்படவேண்டும்.தானத்திற்கு மனிதனுடைய எண்ணங்களையும், செயல்களையும் தூய்மைப்படுத்தும் ஆற்றலுண்டு. அறங்களில் அது சிறந்ததாகக் கருதப்படுகின்றது. தானம் கொடுப்பவருடைய மனதை விரிவாக்கி, பெறுபவருடைய முகத்தில் புன்னகையை தோற்றுவிக்கின்றது.
நற்செயல்களை நம்பிக்கையுடன் செய்தால், தக்க காலத்தில் நல்ல பயன்களைப் பெற்றுத் தரும். தானம் கொடுப்பவனை தனம் எனப்படும் எல்லாவித செல்வச் செழிப்புகளும் வந்தடைகின்றது. இவ்வாறு பேசினார்.ஏற்பாடுகளை டாக்டர் டி.ராமசுப்பிரமணியன், வெங்கட் ரமணி, ஸ்ரீகுமார், ராமகிருஷ்ணன், ஸ்ரீராமன் செய்திருந்தனர்