அண்ணா நகர்,
சென்னையின் பெரிய மழைநீர் வடிகால்வாய் களில் ஓட்டேரி நல்லான் கால்வாயும் ஒன்று. மழைக்காலங்களில் அதிகப்படியான நீர், வெள்ளம் வடிந்து செல்ல, ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. இக்கால்வாய், அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பாடி, வில்லிவாக்கத்தில் துவங்கி, அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் கார்டன், அயனாவரம், புரசைவாக்கம், ஓட்டேரி, புளியந்தோப்பு வழியாக பகிங்ஹாம் கால்வாயில் இணைகிறது. நீர்வளத் துறையில் பராமரிப்பில் உள்ள 10.84 கி.மீ., நீளம் கொண்ட கால்வாயில், துார் வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இது குறித்து துறை அதிகாரிகள் கூறியதாவது:கடந்த பருவமழையின் போது, கால்வாயில் பல்வேறு பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு, தற்போது சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில், பாடி முதல் ஓட்டேரி வரையிலான கால்வாயில் துார் வரும் பணிகளுடன், கால்வாய் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகின்றன. இதுவரை, 80 சதவீத துார் வாரும் பணிகள் முடிந்துள்ளது. கடந்த ஆண்டு, கால்வாய் வழித்தடமான ஸ்டீபன்சன் சுரங்கப் பாதை பகுதியில், வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. விரைவில் துார் வாரும் பணிகள் நிறைவடையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.