சேலம்,-சேலத்தில் நடந்த மாவட்ட அளவிலான தடகள போட்டியில், 1,200 பேர் விளையாடினர்.
சேலம் மாவட்ட தடகள சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள சம்பியன்ஷிப் போட்டி, சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தடகள சங்க தலைவர் விமலன் தலைமை வகித்தார். போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா போட்டியை துவக்கி வைத்தார். 14, 16, 18, 20 வயதுக்கு உட்பட்டோருக்கு என, 4 பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.அவர்களுக்கு, 100 மீட்டர் முதல், 5,000 மீட்டர் வரை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல்ட் வால்ட் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடந்தன.இந்த போட்டிகளில் பள்ளி, கல்லுாரி, பாலிக்டெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர், கிளப் அணியினர் என, 1,200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று விளையாடினர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட தடகள சங்க துணை தலைவர் அன்புகரசு, செயலர் முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியர், திருவண்ணாமலையில் வரும், 16, 17, 18 தேதிகளில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என, தடகள சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.