நாமக்கல்,-நாமக்கல் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில், 1,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்ட அதலெட்டிக் அசோசியேசன் சார்பில், ஆண்களுக்கான முதலாவது ஜூனியர் தடகளப் போட்டிகள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கியது. அசோசியேசன் தலைவரும், எம்.பி.,யுமான சின்ராஜ் தலைமை வகித்தார். நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங், திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில், மாவட்டம் முழுவதும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகள், 14, 16, 18, 20 வயதுக்கு உட்பட்டோர் என, நான்கு பிரிவுகளில் நடந்தது. இதில், 100 மீ., 200 மீ., 400 மீ., 600 மீ., 800 மீ., 1,500 மீ., 2,000 மீ., 3,000 மீ., 5,000 மீ., ஓட்டம், குண்டு மற்றும் ஈட்டி எறிதல், நீளம், உயரம் மற்றும் குதித்து எட்டி தாண்டுதல், 400 மற்றும் 1,600 மீ., தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் தடகள விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் ஆகியோர், பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, அதலெட்டிக் அசோசியேசன் செயலாளர் வெங்கடாஜலபதி, துணைத்தலைவர்கள் நடராஜன், அசோக்குமார், பரந்தாமன், பொருளாளர் கார்த்திக், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இன்று பெண்களுக்கான, முதலாவது ஜூனியர் தடகளப் போட்டிகள் நடக்கிறது.