நாமக்கல்,-'நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை காப்பீடு திட்டத்தில், 2,000 அலகுகள் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது' என, கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை மூலம், மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீடு திட்டம் நடப்பாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. அதில், நாமக்கல் மாவட்டத்தில், கால்நடை காப்பீடு செய்ய, 2,000 அலகுகள் குறியீடு நிர்ணயம் செய்து, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தில், மானியத்துடன் கால்நடைகளை காப்பீடு செய்து கொள்ளலாம். வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு, 50 சதவீதம் மானியத்திலும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினருக்கு, 70 சதவீதம் மானியத்திலும் காப்பீடு செய்யப்படும்.இதன் மூலம், அதிகபட்சமாக, ஒரு குடும்பத்துக்கு, 5 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில், இரண்டரை முதல், 8 வயது உடைய பசு மற்றும் எருமை, ஒன்று முதல், 3 வயது வரையுடைய வெள்ளாடுகள்,- செம்மறியாடுகள், ஒன்று முதல், 5 வயது வரையுடைய பன்றிகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு பயனாளி அதிகபட்சம், 5 மாடுகளுக்கு அல்லது, 50 ஆடுகளுக்கு அல்லது, 50 பன்றிகளுக்கு, ஏதாவது ஒரு இனத்திற்கு காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, தங்கள் பகுதியில் உள்ள அரசு கால்நடை கால்நடை உதவி மருத்துவரை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.