சுகவனேஸ்வரர் கோவில்
குளம், கோசாலையில் ஆய்வு
சேலம், அக். 9-
சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள குளம் மற்றும் கோசாலையை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
சேலம் சுகவனேஸ்வரர் கோவில் குளத்தில், 2 நாட்களுக்கு முன், 40 வயதான ஆமை உயிரிழந்தது. இந்நிலையில் மேட்டூர் மீன்வளத் துறை உதவி இயக்குனர் யுவராஜ் தலைமையில், குளத்தின் நீர் பரிசோதிக்கப்பட்டது. அதில் மீன் களுக்கு தேவையான ஆக்சிஜன் இருக்கிறதா என, ஆய்வு செய்யப்பட்டது. முடிவில் போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் தண்ணீரால் பிரச்னை இல்லை என தெரியவந்தது.
இதையடுத்து கால்நடை துறையினர்
கோ சாலையில் மாடுகளை ஆய்வு செய்தனர். மாடுகளை பராமரிக்க, கால்நடை துறையினர் வழங்கிய அறிவுறுத்தல் பின்பற்றப்படும் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது கோவில் உதவி
கமிஷனர் (பொ) ராஜா, கண்காணிப்பாளர்
ஹரிபிரசாத் மற்றும் அறநிலையத் துறையினர் கலந்து கொண்டனர்.
மயானத்தில் இருந்த
'ராட்சத' தேன் கூடு அழிப்பு
ஆத்துார், அக். 9-
மயானத்தில் இருந்த, 'ராட்சத' தேன் கூட்டை, தீயணைப்பு நிலைய வீரர்கள் அழித்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, மல்லியக்கரை ஊராட்சி, கருத்தராஜாபாளையத்தை சேர்ந்த, 46 வயதுடைய விவசாயி, கடந்த, 6ம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். நேற்று முன்தினம், அவரது உடலை அதே ஊரில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்வதற்கு, 50க்கும் மேற்பட்டோர் சென்றனர்.
மாலை, 4:00 மணியளவில், மயானத்தில் பட்டாசு வெடித்தபோது மரத்தில் இருந்த,
'ராட்சத' தேனீக்கள் கூட்டம், அனைவரையும் விரட்டியுள்ளது. தேனீக்கள் கொட்டியதில்,
25 பேர் காயமடைந்த நிலையில், மல்லியக்கரை மற்றும் ஆத்துார் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர்.
இரண்டு மணி நேரத்துக்கு பின் தேனீக்கள் கூட்டம் சென்றதால், இறந்தவரது உடலை அடக்கம் செய்தனர். தகவலறிந்த ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையிலான வீரர்கள் நேற்று, மயானத்தில் இருந்த 'ராட்சத' தேன் கூட்டை அழித்தனர்.
மகளிர் கல்லுாரி மாணவியர்
கயிறு இழுத்து சாதனை
சேலம், அக். 9-
மாநில கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற அரசு மகளிர் கல்லுாரி மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு கயிறு இழுக்கும் சங்கத்தின் சார்பில், 22வது சீனியர் கயிறு இழுக்கும் போட்டி, சென்னையில் நடந்தது. சேலம் மாவட்ட பெண்கள் அணியில், அரசு மகளிர் கலைக்கல்லுாரியை சேர்ந்த நர்மதா பிரித்தி, திவ்யா, தீபா, திலகா, சரண்யா, மகேஸ்வரி, கீர்த்தனா, மகாஸ்வேதா, ரேவதி ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், 500 கிலோ எடை பிரிவில்
ஒரு தங்கம், 580 கிலோ கலப்பு இரட்டையர் எடை பிரிவில் ஒரு தங்கம் வெற்றி பெற்றனர். மேலும் ஹரியானாவில் நடைபெறும் தேசிய போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றனர். மாணவியரை, நேற்று கல்லுாரி முதல்வர்
கீதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
பாம்பு கடித்து பெண் தொழிலாளி பலி
தலைவாசல், அக். 9-
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, லத்துவாடி கிராமத்தை சேர்ந்த சண்முகம் மனைவி அனிதா, 38; கூலித் தொழிலாளியான இவர், நேற்று மாலை, 4:00 மணியளவில், வீட்டின் வெளிப்பகுதியில் விறகு கட்டைகள் எடுக்கச் சென்றுள்ளார்.
விறகுக்குள் இருந்த பாம்பு, அனிதாவை கடித்துள்ளது. அவரை ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
வீரகனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகுதிநேர ரேஷன் கடை நீதிபதி திறப்பு
சேலம், அக். 9 -
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கோனுார் பஞ்., மடத்துப்பட்டியில், புதிதாக, பகுதிநேர ரேஷன்கடை நேற்று, திறக்கப்பட்டது.
கூட்டுறவு சங்கங்களின்
மண்டல இணைப்பதிவாளர்
ரவிக்குமார் வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் தலைமை வகித்து,
பகுதிநேர ரேஷன்கடையை திறந்து வைத்தார்.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ராஜா, கோனுார் ஊராட்சி தலைவர் கலையரசி
உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒமலுார் சரக துணைப்பதிவாளர் சுவேதா நன்றி கூறினார்.
பல்வேறு கட்சியினர்
அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
சேலம்: சேலம், நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், அ.தி.மு.க., இடைக்கால பொது செயலர் பழனிசாமி முகாமிட்டுள்ளார். கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியம், காக்காவாடி பஞ்., தலைவர், தி.மு.க.,வை சேர்ந்த பிரதீபா பூபதி, பா.ம.க.,வை சேர்ந்த, கரூர் ஒன்றியக்குழு, 2வது வார்டு உறுப்பினர் சத்யா அசோக்குமார், கரூர், 3வது வார்டு மாவட்ட கவுன்சிலரும், த.மா.கா., மாவட்ட துணைத்தலைவரான சிவானந்தம் ஆகியோர், அக்கட்சிகளில் இருந்து விலகி, பழனிசாமி முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அப்போது, முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலர் எம்.ஆர்., விஜயபாஸ்கர், மாவட்ட ஊராட்சி தலைவரும், கட்சி மாவட்ட பொருளாளர் கண்ணதாசன் ஆகியோர் உடனிருந்தனர்.
பட்டா கத்தியால் கேக் வெட்டி
கொண்டாடிய கும்பல் சிக்கியது
சேலம்: கொண்டலாம்பட்டி அடுத்த சித்தன்காட்டுவளவை சேர்ந்தவர் பிரபு, 24. இவர், தனது பிறந்த நாளான, கடந்த 4, நள்ளிரவில், வீட்டருகே உள்ள காளியம்மன் கோவில் பகுதியில், பட்டா
கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி உள்ளார். பின், கூட்டாளிகளுடன் சேர்ந்து, கும்மாளமிட்டுள்ளார். இந்த காட்சி வீடியோ வைரலானது. கொண்டலாம்பட்டி போலீசார், பிரபு, அவரது நண்பர்கள் சுந்தரமூர்த்தி, பிரகாஷ், சூர்யா, அசோக், மெய்யழகன், விஜய குமார், முருகானந்தம், விக்னேஷ்குமார் உள்ளிட்ட
கும்பலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.