காரமடை:இல்லாத வீட்டுக்கு வரி போட்டு காரமடை நகராட்சி நிர்வாகம் காமெடி செய்துள்ளது.
காரமடை நகராட்சி மன்ற கூட்டம், தலைவர் உஷா தலைமையில் நடந்தது. கமிஷனர் பால்ராஜ், துணைத்தலைவர் மல்லிகா, அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் பேசியதாவது:
வனிதா(அ.தி.மு.க.,): தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் ரோடு விரிவாக்கம் செய்ய, ரோட்டில் இருபக்கம் குழிகள் தோண்டி மூன்று மாதங் களுக்கு மேலாகிறது. தார் சாலை அமைக்காததால் தினமும் விபத்து ஏற்பட்டு வருகிறது. வேலைகளை துரிதமாக செய்யும்படி அதிகாரிகளுக்கு, நகராட்சி சார்பில் கடிதம் அனுப்ப வேண்டும்.
ராம்குட்டி(தி.மு.க.,): காமராஜ் நகரில் உள்ள தெருக்களில், பாதிக்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் இரவு, 10:00 மணிக்கு மேல் எரிவதில்லை. மின்விளக்குகளை சீரமைக்கணும். வரி சீராய்வில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதை சீர் செய்ய வேண்டும்.
விக்னேஷ்(பா.ஜ.,): ஒவ்வொரு மாதம் வீடு கட்ட எத்தனை பிளான் கொடுக்கப்படுகிறது என்ற விபரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். வரிவிதிப்பு மறு சீராய்வு செய்தது குறித்து, பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில், வார்டுகளில் அதிகாரிகள் குழுவுடன் கூட்டம் போட்டு, பொதுமக்களின் சந்தேகங்களை தீர்க்க வேண்டும்.
மேலும் வரி மறுசீராய்வு செய்ததில், பல முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. நகராட்சி அதிகாரிகள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
கமிஷனர் பால்ராஜ்: வார்டுகள் தோறும் கூட்டம் போட வாய்ப்பு இல்லை. வரிகள் உயர்வாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள், நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தால், அதை வரி சீராய்வு கமிட்டியின் கவனத்துக்கு கொண்டு சென்று, வரி குறைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
சித்ரா(தி.மு.க.,): இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் பெயருக்கு நகராட்சி அதிகாரிகள், வீட்டு வரி போட்டு அனுப்பியுள்ளனர். இதனால், 'இல்லாத என் வீட்டை நகராட்சி அதிகாரிகள் காண்பித்தால் வரி கட்டுகிறேன்' என வீட்டு உரிமையாளர் கூறுகிறார். நகராட்சி அதிகாரிகள் வரி சீராய்வு செய்து, புதிய வரி போடும்போது கவனமாக இருக்க வேண்டும். தவறுதலாக இதுபோல் அதிகாரிகள் செய்வதால், நிர்வாகத்துக்கு கெட்ட பெயர் ஏற்படும்.
கமிஷனர் பால்ராஜ்: இது சம்பந்தமாக விசாரணை செய்யப்படும்.
இவ்வாறாக விவாதம் தொடர்ந்தது.