சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்படும் மழை நீர் வடிகால் கட்டுமானங்களில், தொழில்நுட்ப குறைபாடுகள் காணப்படுகின்றன. இதனால், மழைக்காலத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படும். இந்த விஷயத்தில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என, நீர் மேலாண்மை மற்றும் கட்டுமான நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில், சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்குவது வாடிக்கையாக உள்ளது. நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு மற்றும் முறையான மழை நீர் வடிகால்கள் இல்லாததே, இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், மழைக்காலத்தில் தண்ணீரை வெளியேற்ற, முறையான வடிகால் வசதிகள் இல்லாதது, பெரிய சிக்கலாக உள்ளது.
இதை கருத்தில் வைத்து, கடந்த ஆட்சிக் காலத்தில் பெரும்பாலான இடங்களில், மழை நீர் வடிகால்கள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது, சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மீண்டும் வெள்ளத்தால் சூழப்பட்டன.
சென்னையின் பிரதான பகுதிகளில் சாலைகளில் தேங்கிய மழை நீர் வெளியேற, சில நாட்கள் வரை ஆனது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு, அவதிக்கு உள்ளாகினர்.
இந்நிலையில், மாநகராட்சியில் தற்போது புதிதாக அமைக்கப்படும் மழை நீர் வடிகால் அமைப்புகள் முறையாக செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து, நீர் மேலாண்மை பொறியாளர் வெங்கடாச்சலம் கூறியதாவது:
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்படும் புதிய மழை நீர் வடிகால்களில், புவியியல் ரீதியாக நிலத்தின் தரைமட்ட உயரம் கணக்கிடப்படவில்லை. கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்கான வழிமுறைகளும் சரிவர பின்பற்றப்படவில்லை.
மழை வெள்ள நீரை கொண்டு செல்லும் கால்வாயின் எடை தாங்கும் திறன், 9,071 கிலோவாக ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில், 2,721 கிலோ அளவு எடையை தாங்கும் அளவுக்கே கால்வாய் கட்டப்படுகிறது.
நீரின் எடையை துல்லியமாக கணக்கிட்டால், 27 ஆயிரத்து 215 கிலோ எடையைத் தாங்கும் அளவுக்கு, வடிகால் கட்டுமானங்கள் இருக்க வேண்டும். ஆனால், அப்படி அமைக்கப்படுவதில்லை.
மேலும், பெரும்பாலான இடங்களில் சாலைக்கும், மழை நீர் கால்வாய்களுக்கும் நடுவில், ஒரு அடி அளவுக்கு உள்ள இடைவெளி சரியாக மூடப்படுவதில்லை. அந்த இடத்தில், வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டியதில் மீதமான மண்ணைக் கொட்டி நிரப்பி விட்டு, பணியாளர்கள் சென்று விடுகின்றனர்.
மழை பெய்யும் போது, மண் கொட்டப்பட்ட இந்த இடைவெளியில் தண்ணீர் இறங்கினால், புதிய பள்ளம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் ஆபத்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, கட்டுமான அமைப்பியல் பொறியாளர் பாலமுருகன் கூறியதாவது:
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழை நீர் கால்வாய்கள் அமைப்பதில், அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், இதில் பாதுகாப்பு ரீதியாக உள்ள பிரச்னைகள் குறித்து, உரிய கவனம் செலுத்தப்படவில்லை.
தலைமை செயலர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் தொடர்ந்து அறிவுறுத்திய போதிலும், கால்வாய் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், அலட்சியமாக இருக்கின்றனர். இதனால், பணிகள் முடியாத பல இடங்களில், மழைக்காலத்தில் மக்கள் நடமாடுவதற்கு அச்சப்படும் சூழல் நிலவுகிறது.
இந்த விஷயத்தில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, ஒப்பந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.